நியூ யார்க்:
சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்டு வந்த சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் நேற்று இரவு நடைபெற்ற விழாவில் சாம்சங் அறிமுகம் செய்தது. சாம்சங் S8 மற்றும் S8+ என இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களில் அந்நிறுவனத்தின் குரல் சார்ந்த விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்ஸ்பி (Bixby) என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை முதன் முதலாக சாம்சங் S8 சீரிசில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று சாம்சங் பிக்ஸ்பி ஆப்பிளின் சிரி, கூகுள் அசிஸ்டண்ட், கார்டனா மற்றும் அமேசானின் அலெக்சா உள்ளிட்ட சேவைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன்களில் பிக்ஸ்பி சேவையை சப்போர்ட் செய்யும் செயலிகளும் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வசதி கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஐரிஸ் ஸ்கேனர் இருப்பதால் பல்வேறு சேவைகளை பாதுகாப்பாக இயக்க உங்களது கண் பார்வை மட்டுமே போதுமானது. இத்துடன் கூடுதல் பாதுகாப்பு வழங்க இரு மாடல்களிலும் கைரேகை ஸ்கேனரும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் மைக்ரோசாப்ட் காண்டினியம் போன்ற வசதியை புதிய ஸ்மார்ட்போன்களில் சாம்சங் வழங்கியுள்ளது. சாம்சங் டெக்ஸ் (Samsung Dex) என அழைக்கப்படும் இந்த சாதனம் உங்களது ஸ்மார்டபோனை கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்த வழி செய்யும். சாம்சங் டெக்ஸ்-இல் புதிய S8 ஸ்மார்ட்போனினை வைத்தால் கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம்.
முந்தைய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த சாம்சங் UI கொண்டு இயங்குகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் QHD+1440×2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவும், S8+ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் QHD+1440×2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது. இவை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.
இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க சந்தையில் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என்றும் இதர சர்வதேச சந்தைகளில் (இந்தியா உட்பட) எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெமரியை பொருத்த வரை இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆப்ஷன்களுடன் பல்வேறு இதர சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் சாம்சங் பே வசதியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், S8+ ஸ்மார்ட்போனில் 3500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி S8 விலை 750 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.48,700 மற்றும் S8+ ஸ்மார்ட்போன் விலை 850 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,200 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.