புதுடெல்லி:
வோடபோன் இந்தியா நிறுவனத்தின் 4ஜி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ரோமிங் கட்டணங்கள் முழுமையாக நீக்கப்பட்டு, முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் இலவச ரோமிங் சேவைகளை வழங்கி வந்தாலும், வோடபோனின் புதிய அறிவிப்பு அவற்றை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ உட்பட சில இந்திய டெலிகாம் நிறுவனங்கள் இந்தியா முழுக்க ரோமிங் கட்டணத்தை ரத்து செய்து இலவசமாக வழங்கி வரும் நிலையில், வோடபோன் தனது 4ஜி வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச அளவில் ரோமிங் கட்டணங்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் வோடபோன் 4ஜி வாடிக்கையாளர்கள் சர்வதேச ரோமிங்கின் போது கவலையின்றி பயணம் செய்யலாம். முதற்கட்டமாக ரோமிங் இலவசங்கள் 40க்கும் அதிகமான நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த டெலிகாம் நிறுவனமான வோடபோன் கடந்த ஆண்டு சர்வதேச ரோமிங்கிற்கென சிறப்பு சலுகைகளை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு ரூ.500க்கு சுமார் 34 நாடுகளில் வேலை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் அறிவிப்பை தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் சர்வதேச ரோமிங் கட்டணங்களை குறைத்தோ அல்லது, சிறப்பு சலுகைகளையோ அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.