Uncategorized

தமிழகம் ரயில்வே போலீஸ் திறமையின்மை.. சுவாதி கொலை வழக்கு சென்னை காவல்துறைக்கு அதிரடி மாற்றம்!

இன்போசிஸ் ஊழியர் சுவாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்த கொலையாளியை பிடிக்க முடியாமல் ரயில்வே காவல்துறை திணறுவதால், இந்த விசாரணை, சென்னை காவல்துறைக்கு (நுங்கம்பாக்கம் காவல் நிலையம்) மாற்றப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, ஒரு வாலிபரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற கொலை என்பதால், இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதால், கொலையாளியின் உருவ படம் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
ரயில் நிலையம் அருகேயுள்ள வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். ஆயினும் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆன பிறகும் கொலையாளியை கைது செய்ய முடியவில்லை.
சிசிடிவி வீடியோ கிடைத்த பிறகும் ரயில்வே போலீசாரால் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை என்பது அந்த போலீசாரின் திறமை மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்க செய்தது. முன்னதாக, சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகும், 2 மணி நேரம், அவரது உடலை கூட மருத்துவமனைக்கு அனுப்பாமல் பிளாட்பாரத்திலேயே வைத்திருந்து விசாரணை நடத்தி அலட்சியம் காட்டியது ரயில்வே போலீஸ்.

எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் நெருக்கடிக்கு மத்தியில், சென்னை ஹைகோர்ட்டும் சுவாதி கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ரயில்வே போலீசாருக்கும், தமிழக போலீசாருக்கும் சரியான புரிதல் இல்லையா, என தமிழக அரசு வழக்கறிஞரிடம் இன்று, கேள்வி எழுப்பி சாடியது ஹைகோர்ட்.
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு விசாரணை, ரயில்வே போலீசாரிடமிருந்து சென்னை காவல்துறைக்கு இன்று மதியம், மாற்றப்பட்டுள்ளது. இதை ரயில்வே டி.ஐ.ஜி. பாஸ்கரனும் உறுதி செய்தார். மாநில டி.ஜி.பி அசோக்குமார் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அந்த போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். எனவே இனிமேல் சுவாதி கொலை வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

image