Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 – 13.04.2016)

ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் பிறக்கிறது. 14.04.2015 செவ்வாய் கிழமை மதியம் மணி 1.42க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக லக்னம் எட்டாம் பாதத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம் கன்னி ராசியில், சுபம் நாம யோகம் பத்தரை நாம கரணத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் நான்காம் சாமத்தில் மயில் ஊண் கொள்ளும் நேரத்தில் செவ்வாய் மகா தசையில், சனி புக்தியில், சுக்ரன் அந்தரத்தில், அங்காரகன் ஓரையில் மன்மத வருடம் சிறப்பாக பிறக்கிறது.
இந்த வருடம் இப்படித்தான்;
மன்மத வருடத்தின் பலன் வெண்பா:
மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே- மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்.
சித்தர் பெருமான் இடைக்காடரின் மேற்கண்ட பாடலின்படி மன்மத ஆண்டில் நன்கு மழை பொழியும். மரம், செடி, கொடி, பறவை மற்றும் விலங்குகள் பெருகும். அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடக்கும். பலவகை தானியங்களும் நன்கு விளையும். நாடாளுபவர்கள் போர் குணம் கொண்டிருப்பார்கள். உலகின் ஒரு பகுதியில் சண்டை மூளும். தெற்கு திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்று வீசும். அரிதான மூலிகைசெடிகள் அழியும்.
  இந்த வருடத்தின் ராஜாவாக சனி பகவான் வருவதால் உலகெங்கும் சாதாரணமானவர்கள் சாமானிய பதவியில் அமர்வார்கள். சில இடங்களில் வறட்சியும், சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் அதிகரிக்கும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மறைமுக பகைமை இருக்கும். இரும்பு, எண்ணெய் வித்துக்களின் விலைகள் குறையும். எலக்ட்ரானிக் சாதனங்களின் அதிக உற்பத்தியால் விலை மலிவாகும். கால்நடைகளை வினோத நோய்கள் தாக்கும். வேலை நிறுத்தங்களும் உண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் அதிகரிக்கும். மக்கள் பாபகாரியங்களை துணிந்து செய்வார்கள்.

திருட்டு பயம் அதிகரிக்கும். சிறுபான்மை மக்கள் பலமடைவார்கள். மந்திரியாக செவ்வாய் வருவதால்  வாகனப் பெருக்கத்தால் பூமியில் வெப்பம் அதிகரிக்கும். மின்சார கசிவால் தீ விபத்துகள் அதிகரிக்கும். எரிமலைகள் வெடிக்கும். முதன்மை பதவியில் இருப்பவர்களுக்கும் இரண்டாம் கட்ட பதவியில் இருப்பவர்களுக்கும் இடையே ஈகோ பிரச்னைகள் அதிகரிக்கும். சேனாதிபதியாக சந்திரன் வருவதாலும் அந்த சந்திரனை குரு பார்ப்பதாலும் ராணுவத்தின் வலிமை அதிகரிக்கும். புதிய ஏவுகணைகள் நவீன போர்தளவாடங்கள் ராணுவத்தில் சேர்க்கப்படும். ஜலகிரகம் சந்திரன் சேனாதிபதியாக வருவதால் கப்பற்படை நவீனபடுத்தப்படும். புதிய நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கப்படும்.

Exit mobile version