political

சித்திரை தாயே வருக…வருக

சித்திரைப் பாவையே உன்றன் வருகையால்
தரணி செழிக்க வேண்டும்!
செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும்
தீமைகள் நீங்க வேண்டும்.இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

தமிழ் ஆண்டுகள் பிரபவ முதல் அட்சய வரை மொத்தம் 60 என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் 31-ம் ஆண்டான ஹேவிளம்பி ஆண்டு இன்று உதயமாகிறது. இன்று விசாக நட்சத்திரம் (3-ம் பாதம்) துலாம் ராசி, மகர லக்னத்தில், சனி பகவானின் ஹோரையில் புத்தாண்டு பிறக்கிறது.

ஹேவிளம்பி வருடத்தின் நட்சத்திர தேவதை முருகப்பெருமான். மேலும் ராஜாதிபதியாக செவ்வாய் வருகிறார். அவரின் அதிதேவதையும் முருகனே. ஆக, இந்தத் தமிழ்புத்தாண்டில் முருகப்பெருமானுக்கான வழிபாடுகளை செய்வதால் வளம் பெருகும். குறிப்பாக செவ்வாய் கிரக அம்சம் நிறைந்துள்ள முருகன் தலங்களில் வழிபாடுகள் செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

முருகப்பெருமானின் விரத வழிபாடுகளில் முக்கியமானது சஷ்டி விரதம். மாதம்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளிலும் வரும் சஷ்டி திதி நாட்களில் உபவாசம் இருந்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல் நிவேத்தியம் செய்து வழிபட வேண்டும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பான பலன்களை தரும்.

சித்திரை மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. அக்காலம் தே, மா, பலா, வாழை போன்றவை செழித்துக் கொழிக்கும் காலமாகும்.

மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும். இதை எடுத்துக் காட்டுவதைப் போல, தமிழகத்தில் வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும்.

அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். சித்திரை மாதத்தில் மாம்பழங்களும் மற்ற வசந்த காலப் பழங்களும் எங்கும் எளிதாக கிடைக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் சித்திரை முதல் தினத்தை ஒரு முக்கியமான பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். அன்று இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும் என்பது மரபு போல உள்ளது.

அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை.

சித்திரை அன்று புத்தாண்டு பஞ்சாங்கம் ஒன்று வாங்க வேண்டும். அதற்கு சந்தனம், குங்குமம், பொட்டு ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்ய வேண்டும்.

பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

சித்திரை முதல் நாளன்று மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயா சம், மசால்வடை போன்றன இடம் பெறும். உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும்.

சித்திரை முதல் நாளில் மகிழ்ச்சியாக இருந்தால் வரும் நாட்களில் மகிழ்ச்சியே நிலவும் என்பது நம்பிக்கை. அதனால் தான் அன்று கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். சிறியவர்கள், பெரியவர்களிடம் வாழ்த்துக்களையும் அன்பளிப்புகளையும் பெறவேண்டும். குழந்தைகளுக்கு கையில் பணம் கொடுத்து ஆசீர்வதியுங்கள்.

சித்திரை மாதம் இனிய மாத மாகக்கருதப்படுகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கம். பகலில் வெயில் அதிகமாக இருக்கும். பிறகு காற்று கடுமையாக இருக்கும். “சித்திரை பத்தில் சினந்த பெருங்காற்று” என்பது பழமொழி.

சித்திரை மாதம் பிறப்பவர்கள் நல்ல செயல்களை செய்பவர்களாக இருப்பார்கள். சித்திரையில் விநாயகர், நவக்கிரக வழிபாடுகளை செய்யலாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் தரலாம்.

About the author

Julier