மீன் இனவிருத்திக்கான மீன்பிடி தடை காலம் இந்த ஆண்டு வரும் புதன்கிழமை (ஏப்ரல் 15) முதல் தொடங்குகிறது. இதன் காரணமாக கிழக்குக் கடலோர விசைப் படகு மீனவர்கள் வரும் மே.29 வரை (45 நாள்கள்) கடலில் மீன்பிடிக்கச் செல்லமாட்டார்கள்.
கோடை காலங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என கண்டறியப்பட்டுள்ளதால் இந்தக் காலங்களில் கடலில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும். இதனால் படிப்படியாக இப்பகுதியில் மீன்வளம் குறையும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 2000-ஆண்டு வங்கக் கடல் பகுதியில் 45 நாள்களுக்கு விசைப்படகுகள் முலம் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது.
இதே போல் இந்த ஆண்டும் தடை காலம் வரும் புதன்கிழமை முதல் தொடங்குகிறது. இதனையடுத்து தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் விசைப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்படும். சென்னை காசிமேடு மீன் பிடித் துறைமுகத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் விசைப் படகுகள் உள்ளன.