நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்னைக்கு அழைத்து 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
அப்போது எந்த வகையில் புகைப்படம் என்பது பற்றி சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இன்று கூட்டம் நடந்தது.
ரசிகர்மன்ற பொறுப்பாளர்கள் சத்தியநாராயணா, சுதாகரன் தலைமை தாங்கினர். இதில் கலந்துகொள்ள அனைத்து மாவட்ட ரஜினிமன்ற தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் சென்னை வந்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினர். இதில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் ரசிகர்மன்ற நற்பணிகள் பற்றி ஆலோசனை நடந்தது. ரஜினி அரசியலுக்கு வருவது பற்றியும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் மாலை ரஜினியிடம் தெரிவிக்கப்படும்.
ரஜினி 6 நாட்கள் தினமும் 1,500 ரசிகர்களை சந்திக்கிறார். 10 ஆயிரம் ரசிகர்களை அவர் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அப்போது ரஜினி அரசிய லுக்கு வர வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
மேலும் அப்பகுதியில் ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
கடைசியாக ரஜினி 2008-ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்து இருந்தார். 9 ஆண்டுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்கிறார்.