Uncategorized

கடனை திருப்பி செலுத்த முடியாததால் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத வரலாறு காணாத கடும் வறட்சி தற்போது ஏற்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கருகி விட்டது.

பயிர்கள் கருகி விட்டதால் இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எட்டயபுரம் அருகே உள்ள முதலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது56). விவசாயியான இவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் உளுந்து, சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டிருந்தார். அப்போது அவர் விளைச்சல் அதிகரிப்பதற்காக அங்கு உள்ள உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகளில் தர்மலிங்கம் கடனுக்காக உரமூட்டைகள், பூச்சிமருந்துகள் வாங்கி இருந்தார்.

தற்போது மழை இல்லாததால் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டது. இதனால் அவரால் கடைகளில் வாங்கிய கடன் பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார். கடன் கொடுத்தவர்கள் கடந்த சில நாட்களாக பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். இதனால் தர்மலிங்கம் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட தர்லிங்கத்துக்கு ராமுதாய் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.