வாஷிங்டன்: விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படும் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்புவது தொடர்பான அறிவிப்பை நாசா நாளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவுக்கு முதன்முதலில் மனிதனை அனுப்பி சாதனை புரிந்த அமெரிக்காவின் நாசா நிறுவனம், அடுத்தகட்ட முயற்சியாக சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக சோலார் ப்ரோப் பிளஸ் என்ற திட்டத்தின் கீழ் விண்கலத்தை அடுத்த ஆண்டு ஏவ திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான முழு விவரங்களையும், நாசா நாளை அறிவிக்கிறது. சூரியனுக்கு அருகில் உள்ள புதன் கோளை விட, 8 மடங்கு அருகில் சென்று இந்த விண்கலம் துல்லியமான தகவல்களை வழங்கும் என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சூரியனின் கதிர்வீச்சையும், 1377 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், சூரியனின் தோற்றம் உள்ளிட்ட ஆண்டாண்டு கால கேள்விகளுக்கு விடை கொடுக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.