அமெரிக்காவில் நடந்து வரும் மாஸ்டர்ஸ் டி20 போட்டியில் பங்கேற்பதற்காக சச்சின்அமெரிக்கா சென்றுள்ளார். வார்னே அணிக்கும் சச்சின் அணிக்குமிடையே நடந்த இரு போட்டிகளில் முதல் போட்டி நியூயார்க்கிலும் அடுத்த போட்டி ஹீஸ்டன் நகரத்திலும் நடைபெற்றது. இரு போட்டிகளிலும் சச்சின் அணி தோல்வி கண்டது. அடுத்த போட்டி வரும் சனிக்கிழமையன்று லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று திடீரென்று சச்சின் தனது ட்விட்டரில் இரு பதிவுகளை வெளியிட்டிருந்தார். முதல் பதிவில் ”கோபமும், வேதனையும் வெறுப்பும் அடைந்துள்ளேன். விமானத்தில் டிக்கெட் இருக்கும் போதும் எனது குடும்பத்தாருக்கு டிக்கெட் ஒதுக்கப்படவில்லை பிரிட்டிஷ் ஏர்வேஸ்” என்று தெரிவித்திருந்தார்.
மற்றொரு பதிவில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் எனது லக்கேஜை வேறு இடத்தில் மாற்றி இறக்கி விட்டீர்கள். தகுந்த பதில் அளிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது சச்சின், தனது லக்கேஜ் மாற்றி இறக்கப்பட்டது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேசிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் அதற்கு உங்களது முழுபெயர் மற்றும் பிற விவரங்களைத் தரவும் என்று பிரிட்டிஷ் ஏர்வேசிடம் இருந்து பதில் வந்துள்ளது. இதையடுத்து வெறுப்பான சச்சின் ட்விட்டரில் பிரிட்டிஷ் ஏர்வேசின் மோசமான செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்க, தற்போது சச்சினுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பிரிட்டிஷ் ஏர்வேசிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் ஒன்றுதான் இது… அப்போ கோகினூர் வைரத்த தூக்கிட்டு போனீங்க இப்போ எங்க சச்சின் லக்கேஜா? என பிரிட்டிஷ் ஏர்வேசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.