செவ்வாய்க்கிழமையன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பெல்ஜிய காவல்துறையினர் மேலும் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
பிரஸ்ஸல்ஸின் வடக்கு ஷயெர்பீக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட நபர் காலில் லேசாக காயமடைந்திருப்பதாக பெல்ஜியத்தின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
அந்த நபர் வைத்திருந்த வெடிபொருள் பையையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
நேற்று பாரீஸில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என உள்ளூர் மேயர் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக பிரஸ்ஸல்ஸில் பின்னிரவில் நடத்தப்பட்ட சோதனைகளில் மேலும் 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ஜெர்மனியில் 2 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.