அப்போது வி.கோபாலகிருஷ்ணன் நாலைந்து படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அவரும், சவுகார் ஜானகியும், எம்.ஆர்.ராதாவும் நடித்த “தாமரைக்குளம்” படத்தின் படப்பிடிப்பு, கோல்டன்ஸ் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் டைரக்டர் `முக்தா’ சீனிவாசன்.
படப்பிடிப்பை பார்க்க வாலி சென்றிருந்தார். அவருக்கு ஒரு புதுமுக நடிகரை கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதுபற்றி வாலி கூறுகிறார்:-
“நானும் அந்தப் புதுமுக நடிகரும் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். மிகமிக ஒல்லியான உருவம். சினிமாவிற்கே அவசியமான கவர்ச்சி என்பது சிறிதளவும் இல்லாத முகம். ஆயினும் படித்தவராக இருந்ததால், அவர் விழியிலும், வார்த்தையிலும் ஓர் அறிவு தீட்சண்யம் இருந்தது. அவருடைய உருவ அமைப்பை வைத்து, இவர் எதை நம்பி சினிமாவில் தன் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்திலேயே அவரிடம் பேச்சைக் கொடுத்தேன். அறிமுகமாகி ஒரு நிமிடமே ஆகியிருந்தும் அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்.
“மிஸ்டர் வாலி, என் சொந்த ஊர் தாராபுரம். என் பெயர் குண்டுராவ். நான் ரெயில்வே டிபார்ட்மெண்டுல கைநிறைய சம்பளத்தோட ஆனந்தமா இருந்தவன். இருந்தாலும் இந்த நடிப்பு ஒரு பித்தாகவே மாறி, என்னுடைய சிந்தனையை முழு நேரமும் ஆக்கிரமிச்சுடுச்சு. நாடகங்களிலேயும் நடிச்சிக்கிட்டிருக்கிறேன். இந்தத் தாமரைக்குளம் படத்தின் தயாரிப்பாளர் என் நாடக நடிப்பைப் பார்த்து எனக்கு இந்தப் படத்துல ஒரு சின்ன வேஷம் கொடுத்திருக்காரு. நடிச்சு முடிச்சா சம்பளமா தொண்ணூறு ரூபா தர்றேன்னாரு. எனக்குப் பணம் முக்கியமில்லை, என் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். இதை நம்பி தைரியமா, ரெயில்வே வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.”
நண்பர் குண்டுராவ் இப்படிச் சொன்னதும் எனக்குப் பொறி கலங்கிப் போய்விட்டது.
“என்ன சார், ரெயில்வே உத்தியோகம் லேசுல கிடைக்குமா? சினிமாவை நம்பி அதை நீங்க விட்டது ரொம்பத் தப்பு” என்று என் உண்மையான வருத்தத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.
“வாலி சார், எனக்கு நம்பிக்கையிருக்கு. ஒரு நாள் நான் கண்டிப்பா `ஸ்டார்’ ஆவேன்; அப்ப ரெயில் நான் வரவரைக்கும் நிற்கும்” என்று சொல்லிவிட்டு குண்டுராவ் ஒரு சிகரெட்டைப் புகைத்தார்.
பிற்காலத்தில் குண்டுராவ், பிரபல நட்சத்திரமாகி கோடம்பாக்கத்தையே தன் கைக்குள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வைத்திருந்தார். நானும் அவரும் பின்னாளில் `வாடா… போடா…’ என்று அழைத்துப் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஆப்த நண்பர்களானோம்.
அந்த `குண்டுராவ்’ வேறு யாருமல்ல. நாகேஷ்தான் அவர்!”
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது பட வாய்ப்பு உடனே கிடைக்காததாலும், உடல் நலம் சரியில்லாததாலும், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போனார், வாலி.
அப்போது, அவர் தந்தை காலமானார்.
வாலியின் அண்ணன் மும்பையில் இருந்தார். “பாட்டு எழுதும் வேலை சரிப்படாது. மும்பை சென்று ஏதாவது வேலை தேடவேண்டியதுதான்” என்ற முடிவுக்கு வந்தார், வாலி. தாயாருடன் மும்பை சென்றார்.
மும்பையில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். தியாகராய நகரில் சிவா- விஷ்ணு கோவில் அருகே இருந்த கிளப்ஹவுசில் தங்கினார். அங்கு 20 அறைகள் இருந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கியிருந்தனர். ஒருவருக்கு வாடகை 15 ரூபாய்.
அங்கே தங்கியிருந்தவர்களில் பெரும்பாலோர் பிரம்மச்சாரிகள். நாகேசும் அப்போது அங்கு தங்கியிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நாகேசும், வாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
அமெரிக்க தூதர் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடராமன் என்ற இளைஞரும், அங்கு தங்கியிருந்தார். அவரும் வாலிக்கு நண்பரானார்.
இவர்தான் பிற்காலத்தில் “வெண்ணிற ஆடை”யில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏறத்தாழ 20 ஆண்டு காலம் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ஸ்ரீகாந்த்.
கிளப் ஹவுசில் தங்கியிருந்தவர்கள் ஒவ்வொருவராக திரை உலகில் நுழைந்தார்கள். வாலிக்குமë நல்ல காலம் பிறந்தது.
ஒரு நாள் காலை, முன்பின் தெரியாத ஒருவர் வாலியைத் தேடி வந்தார். “நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் `அரசு பிக்சர்ஸ்’ அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு டைரக்டர் ப.நீலகண்டனை சந்தியுங்கள். அவர் படத்துக்கு பாட்டு எழுத வேண்டும்” என்றார், அவர்.
வாலிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நாகேஷ் வந்ததும், இந்தத் தகவலைச் சொன்னார். “அரசு பிக்சர்ஸ் ஆபீஸ், நுங்கம்பாக்கத்திலே இருக்குடா. எனக்குத் தெரியும். நானும் உன் கூட வர்றேன்” என்றார், நாகேஷ் மகிழ்ச்சி பொங்க.
மறுநாள் வாலியும், நாகேசும் `அரசு பிக்சர்ஸ்’ அலுவலகத்துக்கு சென்றனர். திரை உலகில் நாகேஷ் புகழ் பெறாத காலம் அது.
ப.நீலகண்டன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். “உங்கள் இருவரில் யார் வாலி?” என்று கேட்டார், ப.நீலகண்டன்.
“நான்தான் சார்! இவர் என் நண்பர். நாகேஷ்னு பேரு. படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்” என்று பவ்யமாக பதில் அளித்தார், வாலி.
“பாட்டு நீங்கதானே எழுதப்போறீங்க?”
“ஆமாம் சார்!”
“அப்ப, அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க!”
ப.நீலகண்டன் இவ்வாறு கூற, நாகேஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.
வாலியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், நீலகண்டன். பின்னர் துணை இயக்குனரை அழைத்து, “பாடல் காட்சி பற்றிய விவரங்களை இவருக்கு விளக்குங்கள்” என்று கூறிவிட்டு, “நீங்கள் நாளை பாடலின் பல்லவிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்” என்று வாலியிடம் தெரிவித்தார்.
வாலி, நாகேசுடன் கிளப் ஹவுஸ் திரும்பினார்.
மகிழ்ச்சி மிகுதியால், இரவெல்லாம் வாலிக்கு தூக்கம் இல்லை.
காரணம் அவர் பாடல் எழுதும் அந்த காதல் காட்சியில் நடிக்கப்போகிறவர், எம்.ஜி.ஆர்! படத்தின் பெயர் “நல்லவன் வாழ்வான்.” எம்.ஜி.ஆருடன் நடிக்கப் போகிறவர் ராஜசுலோசனா.
`எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுதப் போகிறோம்’ என்ற மகிழ்ச்சியில் மனம் பூரிக்க, விடிய விடிய விழித்திருந்து 50 பாடல்களுக்கான பல்லவிகளை எழுதிக் குவித்தார், வாலி!