ஆன்மிகம்

தொழிலில் மேன்மை தரும் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்

அய்யனார் ஒரு கிராம தெய்வம். சிவபெருமான், திருமால் ஆகியோரின் இருபெரும் சக்தியாக தோன்றியவர் அவர். ‘அய்யன்’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள். அய்யனார் வழிபாடு தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரசித்தம்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ளது மேலபுதுக்குடி என்ற ஊர். இங்கு செம்மண் நிறைந்த தேரி பகுதியில் வற்றாத நீர் சுரக்கும் நற்சுனையின் அருகில் பூரண, புஷ்கலா தேவியருடன் அருஞ்சுனை காத்த அய்யனார் அருள்பாலித்து வருகிறார். குளிர்ந்த தாயுள்ளத்துடன், பக்தர்களை காத்து அருளைச் சொரிவதால் இவர் ‘அருஞ்சுனை காத்த அய்யனார்’ என்று அழைக்கப்பட்டார். முற்காலத்தில் இவர் ஒற்றை தாழை மரத்தின் கீழ் இருந்ததால், ‘தாழையடி அய்யனார்’, ‘தாழைமுத்து அய்யனார்’ என்ற பெயர்களில் வணங்கப்பட்டார். வாழை, நாவல்மரங்கள் நிறைந்த பகுதியில் இவர் வீற்றிருப்பதால், ‘வாழையப்பன்’, ‘நாவற்கனியான்’ என்ற பெயரும் அவருக்கு உண்டு.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இங்குள்ள தேரிக்காட்டையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் சிங்கராஜன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அந்தக் காலத்தில் மேலபுதுக்குடியில் உள்ள தடாகத்தில் இருந்து சுவையுள்ள நீரை மக்கள் குடிப்பதற்கு எடுத்துச் செல்வர். கனகமணி என்ற பெண் குடத்தில் நீர் எடுத்து வரும்போது கால் இடறி, அவர் சுமந்து வந்த குடம் ஒரு புற்றின் மீது விழுந்தது. கவுதம முனிவர் நீண்ட காலம் தவம் செய்ததால், அவரை சுற்றி வளர்ந்திருந்த புற்று அது.

குடம் விழுந்து தவம் கலைந்து எழுந்த முனிவர், ‘என் தவத்தை கலைத்ததால் நீ களங்கப்பட்ட பெண்ணாக மரணம் அடைவாய். உன் கையால் யார் தண்ணீர் வாங்கிக் குடித்தாலும் அவர்கள் இறந்து போவார்கள். இந்த உண்மையை நீ வெளியே சொன்னால், அடுத்த நொடியே நீ மரணிப்பாய்’ என்று அந்தப் பெண்ணுக்கு சாபம் கொடுத்தார்.

அறியாமல் செய்த தவறை பொறுத்தருள வேண்டும் என கனகமணி, முனிவரிடம் கண்ணீர் மல்க முறையிட்டாள். ஆனால் முனிவரோ, ‘கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது. நீ மரணம் அடையும் போது சொன்னது பலிக்கும். நீர் சொர்க்கம் செல்வாய்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையில் மன்னன் சிங்கராஜன், சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். அவன் முன் தோன்றிய சிவபெருமானிடம், ‘எனக்கு பசியே இருக்கக் கூடாது. என் மக்களுக்கு எப்போதும் பணி செய்ய வேண்டும் என்பதே என் ஆசை’ என்று கேட்டுக்கொண்டான்.

அதற்கு சிவபெருமான், ‘அந்த வரத்தை கொடுக்க முடியாது. அதற்குப் பதிலாக வேறு வழி சொல்கிறேன்’ என்று கூறி, ஒரு மாய மரத்தை உருவாக்கினார். பின்னர் மன்னரிடம், ‘ இந்த மரத்தில் தினமும் ஒரே ஒரு கனி தோன்றும். உச்சி வேளையில் மூன்று நாழிகை மட்டுமே அந்தக் கனி மரத்தில் தங்கும். அந்த வேளையில் நீ உண்டு விட வேண்டும்.

மரத்தில் இருந்து கனி கீழே விழுந்துவிட்டால் மற்றவர்கள் கண்ணுக்கு தெரிந்துவிடும். ஆனால் அக்கனியை உன்னைத் தவிர வேறு யாராலும் உண்ண முடியாது. என்றாவது ஒருநாள் நீ கனியை சாப்பிட முடியாமல் போனால் மரத்தில் வேறு கனி தோன்றாது. நீ முதல்நாள் சாப்பிட்ட கனி மூன்று நாட்கள் உன் உயிரை காத்து நிற்கும். அதற்குள் நீ அடுத்த கனியை சாப்பிடாவிட்டால் 4-வது நாள் உன் உயிர் பிரிந்து விடும். அந்த மாயமரமும் மறைந்து விடும்’ என்று கூறி மறைந்தார்.

அந்த மாயமரம் காட்டில் இருந்ததால் மன்னன் தினமும் வேட்டைக்கு சென்று, மதிய வேளையில் அக்கனியை பறித்து உண்டு உயிர் வாழ்ந்து வந்தான். அந்த மரத்தை சுற்றிலும் காவலாளிகளை நியமித்தான். ஒருநாள் கனகமணி தண்ணீர் எடுத்து வரும்போது மாயமரத்தில் பழுத்து தொங்கிய கனி அவளது குடத்தினுள் விழுந்தது. அப்போது முனிவர்கள் வடிவில் வந்த குட்டி தெய்வங்கள் கனகமணியிடம் ‘தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொடு’ என்று கேட்டனர்.

தன் கையால் தண்ணீர் கொடுத்தால் முனிவர்கள் மாண்டு போவார்களே என்று நினைத்த கனகமணி, ‘பக்கத்தில் தடாகம் உள்ளது. அங்கு போய் குடித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு சென்று விட்டாள். இதற்கிடையே கனியை காணாமல் பதறிய மன்னன் வீடுதோறும் சோதனை செய்ய உத்தரவிட, கனகமணியின் குடத்தில் மாயக்கனி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவள் ராஜதுரோகி என்ற குற்றத்துடன் மன்னன் முன் நிறுத்தப்பட்டாள். அப்போது கனகமணியிடம் தண்ணீர் கேட்ட குட்டி தெய்வங்கள் அங்கு வந்து, ‘குடத்திற்குள் கனி இருந்ததால்தான், நாங்கள் தண்ணீர் கேட்டபோது இவன் தர மறுத்திருக்கிறாள். இவள் குற்றவாளிதான்’ என்றனர்.

அப்போது ஒரு பெண் முனிவர், ‘மன்னா! பழம் குடத்தில் விழுந்தது பற்றி, கைது செய்யப்படும் வரை அவளுக்கு தெரியாது’ என்று கூறினார்.

அதைக் கேட்ட கனகமணி அந்தப் பெண் முனிவரை கட்டிப்பிடித்து, ‘நீ மட்டுமே உண்மை பேசியதால் இன்று முதல் நீ உண்மை பேசிய அம்மன் (பேச்சியம்மன்) என அழைக்கப்படுவாய்’ என்று வாழ்த்தினாள்.

மன்னன் கனகமணியை தீயிலிட்டு கொல்லும்படி உத்தரவிட்டான். அதன்படி வீரர்கள் கனக மணியை பிடித்து தூணில் கட்டி தீ மூட்டினர். சிறிது நேரத்தில் தீ அணைந்தது. உடல் முழுவதும் எரிந்த நிலையில் ‘தண்ணீர்.. தண்ணீர்..’ என்று புலம்பினாள் கனகமணி.

உண்மை பேசிய அம்மனுடன் வந்த அவளது அண்ணன் அய்யனார், தனது சூலாயுதத்தால் ஓங்கி பூமியில் குத்த அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. கனகமணி அந்த நீரைப் பருகினாள். ‘வலி, வலி’ என அவள் கதறி துடிக்க அய்யனார், கனகமணியின் உடலில் வெண்ணெய் பூசினார்.

அப்போது கனகமணி ‘எனக்காக உண்மை பேசிய அம்மனும், என் தாகத்துக்கு தண்ணீர் தந்த அய்யனாரும் எங்கு போய் அமர்ந்தாலும் எனது மனமும், உடலும் குளிர்ந்தது போல, என் இதயமே ஒரு சுனையாகி அவர்கள் இருக்கும் இடத்தை குளிரச் செய்யும். அவர்களுக்கு அரணாக தாழையும், லட்சுமியும், சரஸ்வதியும் சுனை நீரில் தாமரையாக வீற்றிருப்பார்கள். உங்களை பவுர்ணமியில் மக்கள் வழிபடுவார்கள்’ என்று வாக்களித்தாள். இதையடுத்து கனகமணியின் உயிர் பிரிந்தது. அவளது ஆன்மாவை, தேவகன்னிகள் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.

காவல் தெய்வமான அய்யனார், அவரது வாகனமான குதிரையில் முன்னால் செல்ல, அவரது துணைவிகள் பூரணம், புஷ்கலா இருவரும் பின் தொடர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து பேச்சியம்மன், காவல் தெய்வங்கள் வேலைக்காரியம்மன், கருப்பசாமி, சுடலைமாடன், வன்னிச்சி அம்மன், வன்னியராஜன், இருளப்பன் ஆகியோர் சென்றனர். அவர்கள் அனைவரும் தேரியில் ஒரு மருத மரத்தின் நிழலில் போய் அமர்ந்தனர். அங்கே கனகமணியின் இதயம் சுனையாக மாறி வற்றாத நீரை வழங்கிக் கொண்டிருந்தது.

அப்போது உண்மை பேசிய அம்மன், ‘அய்யனே! நாம் அமரும் இத்திருத்தலத்தில் அருஞ்சுனை உருவாகி உள்ளது. அதனைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளதால் இன்று முதல் இந்தத் திருத்தலம் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்’ என்று அழைக்கப்படும் என்றாள்.

உடனே அய்யனார், ‘பங்குனி உத்திர திருநாளில் நாம் இங்கே அமர்வதால், அன்றைய தினத்தில் இங்கு திருவிழாவாக பக்தர்கள் கொண்டாடு வார்கள். இத்தலத்தில் எனக்கு அடுத்ததாக, உண்மை பேசிய அம்மனான உனக்கே முதல் பூஜை நடக்கும். உண்மையான பக்தர்களுக்கு எப்போதும் அருள்பாலிக்கும் திருத்தலமாக நமது இருப்பிடம் விளங்கும்’ என்றார். உடனடியாக அந்த இடம் பூஞ்சோலையாக மாறியது.

இத்திருத்தலத்தில் பங்குனி உத்திர பெருந்திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் சாமி வீதி உலா நடைபெறும்.

பக்தர்களுக்கு குழந்தை வரம், தொழிலில் மேன்மை, வேலைவாய்ப்பு, திருமண யோகம் வழங்கி அருஞ்சுனை காத்த அய்யனார் அருள் பாலித்து வருகிறார். கோவில் நுழைவு வாசலின் இடது பக்கம் அரசமரத்தடியில் 50-க்கும் மேற்பட்ட நாகர், குதிரை, யானை கற்சிலைகள் உள்ளன. அருகில் விநாயகருக்கு தனி சன்னிதி உள்ளது. வலதுபுறம் மருதமரம், தாழை செடிகள் சூழ்ந்த அருஞ்சுனை உள்ளது. கருவறையில் ‘என் மக்கள் எங்கிருந்தாலும் குறைவில்லா வாழ்வளிப்பேன்’ என அருளும் முகத்துடன் அருஞ்சுனை காத்த அய்யனார் பூரண, புஷ்கலா தேவியருடன் கருணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

அமைவிடம் :

திருச்செந்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்தில் அம்மன்புரம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். அம்மன்புரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு.