புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சித்திரை மாதம் 1-ம் நாள் முதல் ‘ஏவிளம்பி’ ஆண்டு தமிழர்களின் புத்தாண்டாக மலர்ந்திருக்கிறது. இப்புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் வளத்தையும், அமைதியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மேலும் இப்புத்தாண்டு தடைக்கற்களை தகர்த்தெறிந்து புதுவை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்றும் உளமாற வேண்டுகிறேன்.
சித்திரை திருநாள் ஒரு தமிழர் திருநாள். இந்த புத்தாண்டில் அனைத்து தமிழர்களும் தங்கள் உள்ளூர் உறவினர்களோடு கொண்டாடி மகிழும் நாள். புதுவை மாநிலத்தில் தமிழ் புத்தாண்டு அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளை விசு திருநாளாக கொண்டாடி மகிழும் மலையாள சகோதர- சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த இனிய நன்னாளில் புதுவையில் வாழும் விவசாயிகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிட சமுதாயத்தினர், மலைவாழ் மக்கள், மீனவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் அனைவரின் வாழ்விலும் வளம் பொங்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி அவர்களின் பிரச்சினைகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றவர். வட்ட மேஜை மாநாட்டில் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் டாக்டர் அம்பேத்கார். இந்திய அரசியல் தலைவர்களுள் மிக அதிகம் படித்த பேரறிஞர்.
புதுவை மாநிலத்தில் எங்களுடைய அரசு டாக்டர் அம்பேத்காரின் 125-வது ஆண்டு விழாவை மிக விமர்சையாக கொண்டாடுகிறது. அன்னாரின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முனைந்து செயல்படுகிறது. டாக்டர் அம்பேத்கார் 125-வது ஆண்டு விழாவையொட்டி புதுவை மாநில மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அமைச்சர் நமச்சிவாயம்:-
பாரம்பரியம் மிக்க புனிதமான கலாச்சாரத்தை பின்பற்றி மனித குலத்துக்கு பெருமை சேர்த்து நல்வழி காட்டுகின்ற தமிழர்கள், சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
புதிதாய் பிறக்கின்ற தமிழ் புத்தாண்டில் இலக்கை நோக்கி பயணித்து, புதுவை மாநிலத்தின் தனித் தன்மையை காத்து நின்று, உரிமைகளை நிலைநாட்டி மாநில நலன் காக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம். தமிழ் சமுதாய மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அமைச்சர் ஷாஜகான்-
புதுவை மாநில மக்களுக்கும் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என் இனிய சித்திரை ஏவிளம்பி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அளவிலா ஆனந்தம் அடைகின்றேன்.
சுத்தம், சுகாதாரம் பசுமை வளங்கள், நீர்நிலைகள் இவை அனைத்தும் மனித வாழ்வின் அடிப்படை தேவைகள் ஆகும். இதனை நாம் அனைவரும் கருத்தில் கொண்டு இந்த தமிழ் புத்தாண்டில் இவற்றை மேம்படுத்த சபதமேற்று நமது புதுவை மாநிலத்தை பசுமைகள் நிறைந்த சுத்தம், சுகாதாரமான மாநிலமாக மாற்ற அயராது பாடுபடுவோம் என்று கூறி என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
ராதாகிருஷ்ணன் எம்.பி.-
சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அதுபோல் மலையாள மக்களின் வருடப்பிறப்பான விஷூ பண்டிகை நல்வாழ்த்துக்களை புதுவையில் வசிக்கும் மலையாள பெருமக்களுக்கும், மாகி பகுதி மக்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
கோகுலகிருஷ்ணன் எம்.பி.-
உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் உவகையோடு கொண்டாடும் தமிழ் புத்தாண்டில் புதுவை மாநிலம் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் கண்டு, மக்களின் வாழ்வில் ஏமாற்றம் இன்றி ஏற்றம் கண்டிடவும், தமிழர்களாய் பிறந்த நாம், நம் தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டுக்கும், தமிழ் கலாசாரத்துக்கும், தமிழ் இனத்துக்கும் என்றென்றும் உறுதுணையாக இருந்து தலை நிமிர்ந்து வாழ்த்திட இத்திருநாளில் வாழ்த்துகிறேன்.
பாரதிய ஜனதா சாமிநாதன்:-
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைந்து வருங்காலத்தில் ஏழைகள் இல்லா, வறுமையில்லா, கூரை வீடுகள் இல்லா, கழிவறைகள் இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலை உருவாகி ஊழல் இல்லா பாரதத்தின் மூலம் தமிழகம் மற்றும் புதுவை மென்மேலும் வளர்ச்சி அடைய புதிய நம்பிக்கை ஒளி பிறந்திட இந்த தமிழ் புத்தாண்டு வழி செய்யட்டும்.