Indians

சோலார் பேனல் ஊழல் வழக்கில் என்னை ‘பிளாக்மெயில்’ செய்தவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன்: உம்மன் சாண்டி பரபரப்பு தகவல்

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது, சோலார் பேனல் பொருத்தும் நிறுவனத்தை சரிதா நாயரும் அவருடைய நண்பர் பிஜு ராதாகிருஷ்ணனும் தொடங்கினர். இதில் பலரிடம் கோடிக்கணக்கில் ரூபாய் வாங்கி அவர்கள் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையில் அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியே விசாரணை கமிஷன் அமைத்தார். அந்த கமிஷன் சமர்ப்பித்த 1,073 பக்க அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், உம்மன் சாண்டி உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உம்மன் சாண்டி நேற்று கூறியதாவது:

விசாரணை கமிஷன் அறிக்கை பாரபட்சமானது. சிறையில் இருந்து சரிதா நாயர் எழுதியதாகக் கூறப்படும் 21 பக்க கடிதத்தின் நம்பகத்தன்மையை விசாரணை கமிஷன் சரியாக ஆராயவில்லை. 21 பக்க கடிதம் எப்படி அறிக்கையில் 25 பக்க கடிதமானது?

சோலார் பேனல் நிறுவனம் இடதுசாரி தலைமையிலான முந்தைய ஆட்சியின் போதே தொடங்கப்பட்டுவிட்டது. இந்த விஷயத்தில் கமிஷன் அமைதி காத்துள்ளது. கமிஷன் முன் ஆஜரான ஒரு சாட்சி, சரிதா எழுதிய கடிதத்தில் என் பெயர் இல்லை என்று கூறியுள்ளார். அப்படி இருக்கும் போது அறிக்கையில் என் பெயர் இருப்பதாக கூறுவது எப்படி?

மேலும், 4 பாகங்கள் கொண்ட அறிக்கையில் ஒரு பகுதியில் கமிஷன் தலைவர் சிவராஜன் கையெழுத்திடவில்லை. இதற்கு இடதுசாரி அரசு பதில் அளிக்க வேண்டும். இந்த ஊழல் விவகாரத்தில் என்னை பிளாக்மெயில் செய்தவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன். அதுவரை காத்திருங்கள். இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.