‘‘பிரதமர் மோடியை விமர்சனம் செய்வோம். ஆனால், அவரை காங்கிரஸ் கட்சி எப்போதும் அவமரியாதையாகப் பேசியதில்லை. ஆனால், மோடி எதிர்க்கட்சியில் இருந்த போது பிரதமரை அவமரியாதை செய்தார்’’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 9, 14-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
இதை முன்னிட்டு வடக்கு குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாலன்பூரில் நேற்று காங்கிரஸ் கட்சி சமூக வலைதள பிரிவு நிர்வாகிகளுடன் ராகுல் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மற்றும் பாஜக.வுடன் காங்கிரஸ் கட்சிக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதற்காக பிரதமர், பாஜக.வை விமர்சிக்கிறோம். ஆனால், பிரதமர் பதவியை, பிரதமராக இருப்பவரை காங்கிரஸ் கட்சி எப்போதும் அவமதித்தது இல்லை. ஆனால், எதிர்க்கட்சியாக மோடி இருந்த போது பிரதமரை அவமரியாதை பேசியிருக்கிறார்.
மோடியின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம். அதேசமயம் பிரதமராக இருக்கும் அவரை அவமரியாதை செய்ய மாட்டோம். பிரதமர் என்பவர் இந்திய மக்களின் பிரதிநிதி.
எனவே அந்தப் பதவியை நாங்கள் அவமதிக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாட்டை கட்சி சமூக வலைதளப் பிரிவினர் நாட்டு மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு ராகுல் கூறினார்.