பண்டிட் பீம்சென் ஜோஷி அவர்கள், இந்துஸ்தானி இசைப் பாடகர்களில் முதன்மை இடத்தைப் பிடித்தவராவார். அவர் ‘கிரானா காரனாவில் பிற கரானாக்களின் பண்புகளைத் தழுவி தனது சொந்த தனிப்பட்ட பாணியில் கரானாக்களை உருவாக்கினார். இதனாலேயே, அவர் கிரானா காரனாவின் முன்னணி ஒளியாகக் கருதப்படுகிறார். அவர் ஒருங்கிணைந்த ராகங்களைக் கொண்டு மேம்படுத்தப்பட்ட புதிய ராகங்களை உருவாக்கினார். ‘பாரத் ரத்னா’, ‘பத்ம ஸ்ரீ’, ‘சங்கீத நாடக அகாடமி விருது’, ‘பத்ம பூஷன்’, மற்றும் ‘பத்ம விபூஷன்’ விருதுகளைப் பெற்றவராவார். ராகங்களில் ஆதிக்கம் கொண்டு, தனது தனிப்பட்ட பாணிக்காக புகழ்பெற்ற பீம்சென் ஜோஷி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: பிப்ரவரி 14, 1922
பிறப்பிடம்: கடாக், பம்பாய் மாகாணம்
இறப்பு: ஜனவரி 24, 2011
தொழில்: பாடகர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
பீம்சென் ஜோஷி அவர்கள், பிப்ரவரி 14, 1922 ஆம் ஆண்டு மும்பை மாகாணத்திலிருக்கும் கடாக்கில் (இப்போதைய கர்நாடகாவில் உள்ளது) ஒரு மராட்டிய பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையான குருராஜ் ஜோஷி ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பதினாறு உடன்பிறப்புகளில் மூத்தவராகப் பிறந்த அவரின் அன்னை, அவரது குழந்தைப் பருவத்திலேயே காலமானார்.
குருவைத் தேடி பயணம்
பீம்சென் ஜோஷி அவர்களுக்கு, தனது இளமைப் பருவத்திலிருந்தே இசை மீது பேரார்வம் இருந்தது. ஒரு குழந்தையாக இருந்த போதே, அவர் ‘கிரானா காரனாவின்’ தந்தையான அப்துல் கரீம் கான் அவர்களின் ஒரு இசைப்பதிவில் ஆழ்ந்து, மெய்மறந்தார். தனது இசை குருவைத் தேடி, 1932ல் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டு ஆண்டுகளாக அலைந்து திரிந்த அவர், பிஜப்பூர், புனே, மற்றும் குவாலியர் போன்ற இடங்களுக்குப் பயணித்தார். அவர் குவாலியரில், உஸ்தாத் ஹபீஸ் அலி கான் என்ற இசைமேதையால் கற்பிக்கப்பட்டார். வீட்டிற்குத் திரும்பும் முன், அவர் கல்கத்தா மற்றும் பஞ்சாப்பிற்கும் சென்றார்.
இசைப் பயணம்
1936ல், கடாக் அருகிலுள்ள குண்ட்கோல் என்னும் இடத்தில், அப்துல் கரீம் கானின் மாணவரும், சிறந்த காயல் பாடகருமான சவாய் கந்தர்வாவிடம் (பண்டிட் ராம்பன் குண்ட்கோல்கர்) தனது கடுமையான இசைப்பயிற்சியைத் தொடங்கினார். அவர் காயல் பாடும் அடிப்படைகளைக் கற்று, சவாய் கந்தர்வா அவர்களின் ஆதரவின் கீழ் பல ஆண்டுகளாக இருந்தார். கிரானா காரனாவை ஒரு தனிப்பட்ட குரல் மொழியாக உருவாக்குவதற்காக, தனது சொந்த தனித்துவமான பாணியை சேர்த்து, மற்ற கரானாக்களின் பண்புகளைத் தழுவி, மேம்படுத்தப்பட்ட கிரானா காரனாவை உருவாக்கினார். ராகங்களை மேம்படுத்த்தியும், மற்ற ராகங்களை இணைத்தும், அவர் புதிய ராகங்களான ‘கலாஸ்ரீ’ மற்றும் ‘லலித்பட்டியார்’ போன்றவற்றை உருவாக்கினார்.
பண்டிட் பீம்சென் ஜோஷி அவர்கள், காயல் பாணியில் நுட்பத்திறமை மிக்கவராகவும், மேலும் மிகவும் அழகான தும்ரிக்களையும், பஜனைகளையும் அளித்துள்ளார். ஜனவரி 1946ல், தனது குரு ஸ்வாமி கந்தர்வாவின் ஷஷ்ட்யப்தபூர்த்தியைக் குறிக்கும் விதமாக, அவர் தனது முதல் பொது இசை நிகழ்ச்சியை புனேவில் கொடுத்தார்.
அவரது படைப்புகளில் சில
பண்டிட் பீம்சென் ஜோஷி அவர்களின் மிகவும் பிரபலமான ராகங்களாகக் கருதப்படுபவை – சுத்த கல்யாண், மியன் கி தோடி, ப்யூரிய தனஸ்ரீ, முல்தானி, பீம்பலசி, தர்பாரி மற்றும் ராம்கலி ஆகியனவாம்.
பக்திப் பாடல்கள்:
ஜோஷி அவர்கள், கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல பஜனைப் பாடல்கலைப் பாடி, பாராட்டும் பெற்றுள்ளார். வணிக ரீதியாக வெற்றியடைந்த குறுந்தகடுகள் – கன்னட பஜனைகளைக் கொன்ட ‘தாஸ்வாணி’ மற்றும் ‘என்ன பாலிசோ’ மற்றும் மராத்தி அபாங்ககளைக் கொண்ட ‘சந்தவாணி’ போன்றவற்றைப் பாடியுள்ளார்.
தேசப்பற்றுப் பாடல்கள்:
1988ல் வெளியான ஜோஷி அவர்களின் படைப்பான ‘மிலே சுர் மேரா தும்ஹாரா’ இசை வீடியோ, இந்திய தேசிய ஒருங்கிணைப்பையும், இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை உயர்த்தி காட்டும். மேலும், அவர் 50வது குடியரசு தினத்திற்காக, உருவாக்கப்பட்ட ஏ. ஆர். ரகுமானின் ‘ஜன கண மன’வின் ஒரு பகுதியாக இருந்தார்.
பின்னணிப் பாடல்கள்:
ஜோஷி அவர்கள், கன்னட படங்களான ‘சந்தியா ராகா’ மற்றும் ‘நோடி ஸ்வாமி நாவு இரோது ஹீகே’; ஹிந்தி படங்களான ‘பசந்த் பஹார்’, ‘பீர்பால் மை பிரதர்’, ‘தான்சென்’ மற்றும் ‘அன்கஹீ’ போன்ற படங்களில் பின்னணியும் பாடியுள்ளார்
விருதுகளும், அங்கீகாரங்களும்
பீம்சென் ஜோஷி பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றவர். அவர் பெற்ற மதிப்புமிக்க விருதுகளின் பட்டியல் இதோ…
- 1972 – பத்ம ஸ்ரீ
- 1976 – சங்கீத் நாடக் அகாடமி விருது
- 1985 – பத்ம பூஷன்
- 1985 – சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது
- 1986 – “முதல் பிளாட்டினம் டிஸ்”
- 1999 – பத்ம விபூஷன்
- 2000 – “ஆதித்ய விக்ரம் பிர்லா கலாஷிக்கார் புரஸ்கார்”
- 2001 – கன்னட பல்கலைக்கழகத்திலிருந்து “நடோஜா விருது”
- 2002 – மஹாராஷ்ட்ர பூஷன்
- 2003 – கேரள அரசின் “ஸ்வாதி சங்கீத புரஸ்காரம்”
- 2005 – கர்நாடக ரத்னா
- 2008 – பாரத் ரத்னா
- 2008 – “ஸ்வாமி ஹரிதாஸ் விருது”
- 2009 – தில்லி அரசின் மூலமாக “வாழ்நாள் சாதனையாளர் விருது”
- 2010 – பெங்களூர் ராம சேவா மண்டலியிடமிருந்து, “எஸ்.வி நாராயணசுவாமி ராவ் தேசிய விருது”
இறப்பு
இரைப்பை ரத்தப்போக்கு மற்றும் இருபக்க நிமோனியாவால் அவதிப்பட்ட பீம்சென் ஜோஷி அவர்கள், டிசம்பர் 31, 2010 ஆம் ஆண்டு, ஷயாத்ரி சூப்பர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சுவாச சிக்கல் இருந்ததால், அவரை மூச்சுக்காற்றூட்டப்படும் கருவியில் வைத்திருந்தனர். அவர் மருத்துவமனையில் இருந்த காலத்தில், அவருக்கு தசைவலிப்பும் வந்தது, மேலும் டையாலசிசும் செய்யப்பட்டது. பின்னர், அவர் கொஞ்சம் தேறி இருந்தாலும், அவரது நிலைமை மறுபடியும் மோசமானது. அவரது 89வது பிறந்த தினத்திற்கு பதினொரு நாட்களுக்கு முன், அவர் ஜனவரி 24, 2011 ஆம் ஆண்டு இறந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன், புனேவிலுள்ள வைகுந்த் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
காலவரிசை
- 1922: மும்பையிலிருக்கும் கடாக்கில் ஒரு மராட்டிய பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
- 1932: அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.
- 1936: சிறந்த காயல் பாடகரான சவாய் கந்தர்வாவிடம் இசைப்பயிற்சியைத் தொடங்கினார்.
- 1946: தனது குரு ஸ்வாமி கந்தர்வாவின் ஷஷ்ட்யப்தபூர்த்தியின் போது, தனது முதல் பொது இசை நிகழ்ச்சியை புனேவில் கொடுத்தார்.
- 1988: இந்திய தேசிய ஒருங்கிணைப்பையும், இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை உயர்த்தி காட்டும் இசை வீடியோவான ‘மிலே சுர் மேரா தும்ஹாரா’ வெளியிட்டார்.
- 2011: ஜனவரி 24, 2011 ஆம் ஆண்டு இறந்தார்