கடந்த முறை இந்திய அணி, இங்கிலாந்து சென்றிருந்த போது டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜடேஜாவைத் தள்ளிவிட்டதாக ஆண்டர்சன் மீது புகார் எழுந்தது.
அந்த சம்பவத்துக்குப் பிறகே தான் மாறிவிட்டதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.
இன்று இங்கிலாந்து-மே.இ.தீவுகள் அணி ஆன்ட்டிகுவாவில் விவ் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன.
இந்நிலையில் ஜடேஜாவுடனான சம்பவம், அதனையடுத்த விசாரணைக்குப் பிறகு தான் முன்பு இருந்த ஆக்ரோஷமான பவுலராக இருப்பேனா என்பது சந்தேகமாக உள்ளது என்று ஆண்டர்சன் தெரிவித்தார்.
டிரெண்ட் பிரிட்ஜில் அன்று, 2-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது பெவிலியனில் ஜடேஜாவை பிடித்துத் தள்ளியதாக ஆண்டர்சன் மீது இந்திய அணி புகார் செய்தது.
விசாரணையில் இருவரையும் ஐசிசி விடுவித்தது. ஆனால், ஐசிசி அதன் பிறகு தன்னை கண்காணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாக ஆண்டர்சன் தெரிவித்தார்.
“அந்த சம்பவத்துக்குப் பிறகே நான் வித்தியாசமானவனாக உணர்கிறேன். அது என்னை உலகக் கோப்பை போட்டிகளின் போது பாதித்தது.
இந்திய தொடரின் போது பெரிதாக அந்தச் சம்பவம் என்னை பாதிக்கவில்லை, ஏனெனில் அப்போது வெற்றி பெறுவதற்கான உண்மையான உறுதி இருந்தது. நான் அதுவரை ஆக்ரோஷமானவானகவே இருந்தேன்.
ஆனால், உலகக் கோப்பை போட்டிகளின் போது ஐசிசி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம் என்னிடம் அதிகமாக இருந்தது.
வஹாப் ரியாஸின் அருமையான பந்துவீச்சையும் ஷேன் வாட்சனையும் பார்த்தோம் ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இயல்பான ஆக்ரோஷம் எனக்கு கைகொடுத்தது. ஆனால், உலகக் கோப்பையில் சற்றே பின் வாங்கினேன், அது என்னை பாதித்தது” என்றார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.