அஜீத் நடித்த ‘வீரம்’ மற்றும் விஜய் நடித்த ‘ஜில்லா’ ஆகிய இரண்டு படங்களும் கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாகி இரண்டுமே ஹிட் ஆகியது. இந்நிலையில் மீண்டும் 2016 பொங்கல் திருநாளில் அஜீத் மற்றும் விஜய் படங்கள் மோதவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து ஒருமாத ஓய்வுக்கு பின்னர் ஜூலை முதல் அட்லி இயக்கவுள்ள படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அவர் டிசம்பருக்குள் முடித்துவிட்டு பொங்கல் நாளில் வெளியிட வேண்டும் என விரும்புவதாக அவரை நெருங்கிய வட்டாரங்களில் கூறுகின்றனர்.
அதேவேளையில் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பின்னர் தற்போது அஜீத், சிவா இயக்கத்தில் நடிக்கும் ‘தல 56′ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியது என்பதை அனைவரும் அறிவோம்.
இந்த படத்தை தயாரித்து வரும் ஏ.எம்.ரத்னம், படத்தை வரும் 2016 பொங்கல் நாளில் வெளியிட முடிவு செய்துள்ளாராம். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அஜீத் மற்றும் விஜய் படங்கள் மோதவுள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் பரபரப்பாக உள்ளனர். இப்பொது முதலே இதுகுறித்த வாக்குவாதங்கள் டுவிட்டரில் ஆரம்பமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.