ஹைதராபாத் : ஆந்திராவில் தனியார் பாலிடெக்னிக் மாணவரின் ஹால்டிக்கெட்டில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் புகைப்படம் தவறுதலாக அச்சிடப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் கிரிஷ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
பாலிடெக்னிக் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கிரிஷ் தனது ஹால்டிக்கெட்டை இண்டர்நெட் மையம் மூலம் பெற்றார். அப்போது, அந்த ஹால்டிக்கெட்டின் அவரது புகைப்படம் இடம்பெற வேண்டிய இடத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் புகைப்படம் இருந்ததைக் கண்டு கிரிஷ் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் தனது கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். பின்னர், இது குறித்து மாநில தொழிற்கல்வி ஆணையரிடமும் அவர் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து, அதே ஹால் டிக்கெட்டில் தெலுங்கானா முதல்வரின் புகைப்படத்திற்கு அருகிலேயே மாணவர் கிரீஷின் புகைப்படம் ஒட்டப்பட்டது. தற்போது அந்த ஹால்டிக்கெட்டைப் பயன்படுத்தியே கிரிஷ் தேர்வு எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.