political

கட்சிக்கு நிதி திரட்ட கூலி வேலை செய்யும் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்: மந்திரிகள், தொண்டர்களுக்கும் உத்தரவு

ஐதராபாத்:

தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ் நேற்று தனது கட்சியினருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், மந்திரிகள் அனைவரும் 2 நாள் கூலி வேலை செய்ய வேண்டும். இதில் கிடைக்கும் சம்பளத்தை கட்சிக்கு நிதியாக அளிக்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு.

இன்று முதல் வருகிற 21-ந்தேதிவரை இந்த திட்டத்தில் ஒவ்வொருவரும் ஏதாவது 2 நாட்களை தேர்வு செய்து கூலி வேலை செய்ய வேண்டும், 21-ந்தேதி நடைபெறும் கட்சி மாநாட்டில் நிதியை அளிக்கலாம். தெலுங்கானா மாநிலத்தின் இதயப் பகுதியான வாரங்கல்லில் இந்த மாநாடு நடக்கிறது என்றும் சந்திரசேகரராவ் தெரிவித்தார்.

மேலும் தானும் 2 நாட்கள் விவசாயிகளுடன் இணைந்து கூலி வேலை செய்வேன், எங்கே எப்போது? என்பதை பிறகு தெரிவிப்பேன் என்றும் சந்திரசேகரராவ் கூறினார்.

2014-ல் 52 லட்சமாக இருந்த கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 75 லட்சமாக அதிகரித்து இருப்பதாகவும், ரூ.35 கோடி நிதி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.