political

ராக்கிங் கொடுமையால் மாணவர் தற்கொலை: கேரளாவில் இன்று முழு அடைப்பு

 திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மகிஜா. இவரது மகன் ஜிஷ்ணுபினராய். அந்த பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி வகுப்பறையில் ஜிஷ்ணுபினராய் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

ஆனால் தனது மகன் ஜிஷ்ணுபினராய் ராக்கிங் கொடுமை காரணமாகவே மரணம் அடைந்ததாக மகிஜா குற்றம் சாட்டினார். தனது மகன் சாவுக்கு காரணமான மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.

இது தொடர்பாக தனது மகன் சாவுக்கு நீதி கேட்டு தாய் மகிஜா பல்வேறு போராட்டங்களை நடத்தினார். கேரள முதல்வர் மற்றும் பலருக்கு இது தொடர்பாக மனுக்களையும் அனுப்பினார். மகிஜாவின் போராட்டத்திற்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்ததால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மகிஜா, அவரது உறவினர்கள் திரண்டு சென்றனர். அவர்களுடன் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பினரும் சென்றனர்.

அவர்கள் அனைவரும் கும்பலாக டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அதற்கு போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. மகிஜா உள்பட 6 பேர் மட்டும் உள்ளே சென்று டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவிடம் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள். ஆனால் அதை மகிஜாவும் அவருடன் வந்தவர்களும் ஏற்க மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தரையில் அமர்ந்து போலீசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மேலும் அத்துமீறி டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். நிலைமை விபரீதமானதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினார்கள். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது.

போலீசார் தடியடியில் மகிஜா மற்றும் அவரது உறவினர்கள் பா.ஜனதா கட்சியினர் காயம் அடைந்தனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்ததால் மகிஜாவை போலீசார் குண்டு கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த மற்றவர்களும் அந்த ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

போலீஸ் தடியடியில் காயம் அடைந்த மகிஜா கூறியதாவது:-

நாங்கள் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அமைதியான முறையில் சென்று டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்க முயற்சி செய்தோம். ஆனால் போலீசார் எங்களை உள்ளே விட மறுத்து மிருகத்தனமாக தாக்கினார்கள்.

எனது மகன் சாவுக்கு காரணமான மற்றவர்களை கைது செய்ய வேண்டும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடும் என்னை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆஸ்பத்திரிக்கு மகிஜாவிற்கு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் கட்சியினரும் இந்த தடியடிக்கு கண்டனம் தெரிவித்து திருவனந்தபுரத்தில் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது.

கேரளாவில் வருகிற 12-ந்தேதி மலப்புரம் எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் போலீசார் நடத்திய தடியடி ஆளுங்கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கேரள முன்னாள் முதல்-மந்திரியும் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் ஆவேசம் அடைந்தார்.

உடனடியாக அவர், டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவை போனில் தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்தார். இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த போலீசார் தடியடி நடத்தி உள்ளதாக அவர் கூறினார். அதற்கு டி.ஜி.பி. அளித்த விளக்கத்தையும் அவர் கேட்காமல் தனது போன் இணைப்பையும் துண்டித்து விட்டார்.

இதற்கிடையில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். அப்போது அவருக்கு பா.ஜனதா கட்சியினர் கருப்புக்கொடி காட்டினார்கள்.

உடனே கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கு சென்று பா.ஜனதா கட்சியினரை தாக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு பா.ஜனதா கட்சியினரை விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்த சம்பவம் பற்றி பினராய் விஜயன் கருத்து தெரிவிக்கையில் இந்த சம்பவத்தில் போலீசார் சரியான முறையில்தான் நடந்துள்ளார்கள். பொதுமக்கள் போர்வையில் பா.ஜனதா கட்சியினர் பிரச்சினை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. போலீசார் எச்சரிக்கையும் மீறி டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் அவர்கள் நுழைய முயன்றதால் போலீசார் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றார்.

டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்த தடியடியை கண்டித்து இன்று கேரளாவில் பா.ஜனதா கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவை தெரிவித்துள்ளது.

இதனால் இன்று கேரளாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் இயங்கவில்லை. சில தனியார் வாகனங்கள் மட்டும் இயங்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக அங்கிருந்து எந்த பஸ்களும் குமரி மாவட்டத்திற்கு வரவில்லை. அதேபோல குமரி மாவட்டத்தில் இருந்து சென்ற அரசு பஸ்களும் மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

About the author

Julier