political

“பா.ஜ.க-வும் திராவிடக் கட்சிதான்…!” பொன்.ராதாகிருஷ்ணனின் புது விளக்கம்

விவசாயிகள் போராட்டம், இந்தி திணிப்பு, சர்ச்சைப் பேச்சுக்கள்… என்று எப்போதும் பிஸியாகவே இருக்கிறது பி.ஜே.பி.! இதுகுறித்து, அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்….

”சமீப நாட்களில், ஹெச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ச்சியாகப் பேசிவருகிறாரே… தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை ஒழித்துவிட்டு, பி.ஜே.பி கால் ஊன்ற வைக்கும் முயற்சியின் அச்சாரமாக இதனை எடுத்துக்கொள்ளலாமா?” என்ற நமது கேள்விக்கு அவர் கொடுத்த விரிவான விளக்கம் இது

”முதலில் என்னுடைய கருத்தினை நான் சொல்லிக்கொள்கிறேன். அவர் என்ன பேசினார் என்ற முழு விவரம் எனக்குத் தெரியாது. இனிமேல்தான் அதுகுறித்து விசாரிக்க இருக்கிறேன். அதற்குப் பிறகு எனது கருத்தை நான் தெரிவிக்கிறேன். கட்சிகளைப் பற்றியும் அதன் கொள்கைகளைப் பற்றியும் விமர்சனம் செய்யும் உரிமை எல்லோருக்கும் உண்டு. கட்சியில் உள்ள நபர்களின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனம் செய்யலாம். அதே சமயம் தனிப்பட்ட விமர்சனங்கள் ஒதுக்கப்படவேண்டியவை.

ஆனால், திராவிடக் கட்சிகள் என்று நீங்கள் சொல்கிற இந்த வார்த்தையையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. திராவிடம் என்பது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா என இந்த தென்னகப் பகுதியைக் குறிக்கும் சொல்தான். அதனால் இந்தப் பகுதியில் நடக்கும் எல்லாச் செயல்களும் திராவிடம் சம்பந்தப்பட்டவைதான். அந்தவகையில், இந்த திராவிட மண்ணில் இருக்கக்கூடிய எல்லோரையும் மதிக்கக்கூடிய செயல்களைச் செய்பவர்கள் மட்டுமேதான் ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தகுதியானவர்கள். ஆனால், தி.மு.க., அ.தி.மு.க என இரு கட்சிகளும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களையோ அல்லது மொழியையோ ஒருமுறையாவது மதித்திருக்கிறார்களா? வெறுமனே திராவிடம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றிரண்டு குறிப்பிட்ட சாதிகளைக் குறை சொல்வதற்குத்தான் பயன்படுத்துகிறார்களேத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை.

தமிழ்நாட்டின் நலனுக்காகப் போராடக்கூடியவர்கள் ‘திராவிடம்’ என்ற பதத்தைப் பயன்படுத்துவார்களேயானால், நானும் அதனைப் பயன்படுத்துவேன். அந்தவகையில், நானும் திராவிடன்தான். நான் சார்ந்திருக்கும் கட்சியும் திராவிடக் கட்சிதான். ஆக, திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை நான் ஒருநாளும் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். அது எனக்கு ஏற்புடையதும் அல்ல. திராவிடத்தை ஒழிப்பது என்பது ஒரு பகுதியையே ஒழிப்பது. அப்படி நாங்கள் சொல்லவே இல்லை. ஆனால், இந்தக் கட்சிகளோ, உடனே ஆரியம் திராவிடம் என்று பிரித்துப்பேசி பிரச்னையை திசை திருப்புகிறார்கள்.

நாங்கள் சொல்வது, கடந்த 50 ஆண்டுகளாக நீங்கள்தான் இந்த நாட்டை ஆண்டு வந்திருக்கிறீர்கள். தமிழர்களை, தமிழ்நாட்டை, தமிழ் மொழியைக் காப்பாற்றுவதாகச் சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால், சுதந்திரம் பெற்றதில் இருந்து 1967 வரையிலும் தமிழ்நாடு பெற்ற வளர்ச்சிக்கும், அதற்குப் பிறகு இவர்கள் ஆட்சிக்கு வந்த இந்த 50 ஆண்டுகால வரலாற்றிலும் நாட்டை எந்த வகையில் வளர்ச்சியடைய வைத்திருக்கிறீர்கள்? ஒரு முன்னேற்றமும் இல்லை. ஏன் அவர்கள் இதைச் செய்யவில்லை? அரசியல் ரீதியாக மட்டுமே இந்தக் கேள்விகளை நான் கேட்கிறேன். ஆனால், இவர்கள் இதே கூற்றை வேறு வகையில் திசை திருப்பி தப்பிக்கப் பார்க்கிறார்கள். அதற்கு நான் இடம் கொடுக்கமாட்டேன்.

ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்காக என்னென்ன முயற்சிகள் செய்தீர்கள் என்று மக்களிடம் கணக்கு காட்டுங்கள். நாங்களும் எங்களுடைய கருத்துகளைச் சொல்கிறோம். மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள் சொல்லட்டும். ஆனால், இதை நாங்கள் சொன்ன உடனேயே, ‘திராவிடத்தை அழிக்க முடியாது, திராவிட இனத்தை அழிக்கமுடியாது, திராவிடக் கொள்கைகளை அழிக்க முடியாது, பெரியாரை அழிக்கமுடியாது’ என்று ஏதேதோ இழுத்துக்கட்டிப் பேசுகிறார்கள். நான் எப்போது பெரியாரை கிண்டல் பண்ணினேன்?

பெரியாருடைய கொள்கைகளில் எனக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் உண்டு. ஆனாலும் நான் மதிக்கக்கூடிய தலைவர் பெரியார். தெருத்தெருவாக கதர் துணிகளை சுமந்து அலைந்த அவரது தியாகத்தை நாம் மறக்க முடியுமா? அல்லது மறக்கத்தான் முடியுமா? பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வராத அந்தக் காலத்திலேயே தனது மனைவியையும் தெருத்தெருவாக கதர் துணியை விற்றுவரச் செய்தவர்; கள் எதிர்ப்புக்காக அவரது தோட்டத்து தென்னைகளையே வெட்டி வீழ்த்தியவர். கடவுள் மறுப்பு அவரது கொள்கை என்றாலும்கூட, நம்பிக்கையாளர்கள் இறைவணக்கம் பாடும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதிலும், அவர்கள் கொடுக்கும் திருநீற்றை மதித்து நடந்துகொண்ட விஷயங்களையும் நாம் அவமானப்படுத்த முடியுமா?

பிள்ளையார் உடைப்பு மற்றும் அவரது நாத்திகக் கருத்துகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனாலும்கூட இந்த திராவிடக் கட்சிகள் பெரியாரை தங்களது கேடயமாகப் பயன்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், பெரியார் ஒருநாளும் இவர்களுக்குக் கேடயமாக வந்து நின்றது கிடையாது.

நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான்… ஆட்சிக்கு வந்த இந்த 50 ஆண்டுகளில் நீங்கள் தமிழகத்தில் என்ன சாதனை செய்தீர்கள்? என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும்தான். அதற்கானப் பதிலை மட்டும் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு திராவிடத்துக்கு எல்லாம் நீங்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அதற்கான அர்த்தம் எல்லாம் எங்களுக்குத் தெளிவாகவேத் தெரியும்.”