திருவனந்தபுரம்:
“தலாக், தலாக், தலாக்” என்று மூன்று முறைக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் முறை இஸ்லாமிய மதத்தில் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்து முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்லாமிய பெண்களில் சிலர் நீதிமன்றங்களை நாடி வருகின்றனர்.
இருப்பினும் நூதன முறையில் ‘தலாக்’ அறிவிப்பது அதிகரித்து வருகிறது. இந்த ‘தலாக்’ முறையை எதிர்த்து, பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். நாளுக்கு நாள் இது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான விவாதங்கள் அதிகரித்தும் வரும் நிலையில், தலாக் வழக்குகளுக்கு இலவச சட்ட உதவி மையங்களை கேரள அரசு தொடங்கி வைத்துள்ளது.
கேரள சிறுபான்மையினர் ஆணையம் நேற்று இதனை தொடங்கி வைத்தது. அதற்குள் 21 பெண்கள் இந்த சட்ட உதவி மையத்தை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி பி.கே.ஹனீபா தலைமையிலான இந்த ஆணையம், 14 மாவட்டங்களிலும், தலா நான்கு பெண் வழக்கறிஞர்கள் கொண்ட சட்ட உதவிக் குழுக்களை அமைத்துள்ளது.
இந்தக் குழுக்கள் பாதிக்கப்படும் பெண்கள் நீதிமன்றங்களுக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு உரிய சட்ட உதவிகள் வழங்குவார்கள்.