ரஜினிகாந்த், 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்கள்.
“ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அனைத்து ரசிகர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். அவருடைய அரசியல் பிரவேசத்தை தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே அரசியல் தூய்மைப்படுத்தப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே விரைவில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்” என்று அவர்கள் பேசினார்கள். இதுகுறித்து இப்போது விவாதிக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் பதில் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்த்து சென்னையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மண்டபம் எதிரில் காலையில் இருந்தே திரண்டு நின்று ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வாழ்க, வருங்கால முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க’ என்று கோஷமிட்டபடி இருந்தனர். சிலர் ரஜினிகாந்த் உருவப்படத்துடன் மன்ற கொடிகளையும் கையில் பிடித்தபடி வந்து இருந்தார்கள்.
ரசிகர்கள் கூட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்டபத்தை சுற்றிலும் சென்னையின் பல பகுதிகளிலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி ரசிகர்கள் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டி இருந்தார்கள். இலங்கை செல்ல எதிர்ப்பு கிளம்பியதை கண்டித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
ரஜினிகாந்த் இலங்கை செல்வது சர்ச்சையானதால் பயணத்தை அவர் ரத்து செய்தது, ஈழத்தமிழர்கள் ரஜினிகாந்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது. இதற்காக ஈழத்தமிழர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தது, ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் என் ஆதரவு யாருக்கும் இல்லை என்று டுவிட்டரில் அவர் அறிவித்தது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காகவே அவர்களை சந்திக்கிறேன் என்றும் ரசிகர்களை சந்திப்பதில் அரசியல் இல்லை என்றும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.