ஹர்மந்திர் சாஹிப் , பொதுவாக பொற்கோயில் (Golden Temple), என்பது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து குருத்வாராவில் அதை நிறுவினார்.
ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் , இங்கு வைக்கப்பட்டுள்ளது . இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.
ஹர்மந்திர் சாஹிப்ற்குள் நுழைய நான்கு கதவுகள் உள்ளன. இது அனைத்து மக்கள் மற்றும் சமயங்களின் மீதான சீக்கியர்களின் வெளிப்படைத்தன்மையை பறைசாற்றும் சின்னமாக உள்ளது. இன்றைய நிலையில் உள்ள குருத்வாரா, ஜஸ்ஸா சிங் அலுவாலியாவினால் மற்ற சீக்கிய படையணி உதவியுடன் 1764 இல் மீண்டும் கட்டப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மகாராஜா ரஞ்சித் சிங், வெளி தாக்குதலில் இருந்து பஞ்சாப் பகுதியியை பாதுகாத்து குருத்வாராவின் மேல் மாடிகளை தங்கத்தினால் மூடினார். இதுவே அதன் தனித்துவமான தோற்றதிற்கும் அதன் ஆங்கில பெயருக்கும் (Golden Temple) காரணமாகிறது.
ஹரிமந்திர் சாஹிப் சீக்கியர்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப்,எப்போதும் குருத்வாரா உள்ளே இருக்கும். இதன் கட்டுமானத்தின் முக்கிய நோக்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அனைத்து மதங்களையும் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சமமாக வந்து கடவுளை வழிபட ஒரு இடத்தை உருவாக்குவதாகும். 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.