மும்பை: நாடு தனது 70வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா பற்றிய சில அடிப்படை உண்மைகளை கூட இளைஞர்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது. போதார் கல்வி நிலையம், மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அப்போது தேசிய கொடியில் உள்ள நிறங்கள் எதைக் குறிக்கிறது என்று 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதில் மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை இளைஞர்களில் முறையே 10 சதவீதம், 12 சதவீதம் மற்றும் 8 சதவீதம் பேர் மட்டுமே சரியான பதிலை தெரிவித்தனர்.
இதேபோல மூன்று நகரங்களிலும் 40 சதவீதத்துக்கும் குறைவான இளைஞர்கள்தான் தேசிய கீதத்தை முழுவதுமாக பாடினார்கள். தேசிய கீதத்தை எழுதியவர் யார் என்ற கேள்விக்கு மும்பையில் சுமார் 42 சதவீதம் இளைஞர்களும் பெங்களூருவில் 34 சதவீதம் பேரும் சென்னையில் 28 சதவீதம் பேரும் சரியான பதிலை சொன்னார்கள். அவர்களுக்கு இரண்டு ஆப்சன்கள் கொடுக்கப்பட்டபோது சரியான பதிலை சொன்னவர்களின் சதவீதம் முறையே 53 சதவீதம், 49 சதவீதம் மற்றும் 38 சதவீதமாக அதிகரித்தது. ரவீந்திரநாத் தாகூர் என்ற சரியான பதிலை அவர்கள் தெரிவித்தனர்.
சுதந்திர போராட்டம் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கும்கூட திருப்திகரமான பதில்கள் இல்லை. உதாரணத்துக்கு, பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் யார் என்று கேட்டதற்கு, மும்பையில் 34 சதவீதம் பேர் மட்டுமே சரியான பதிலை தெரிவித்தனர்.