அகமதாபாத்,
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாரதீய ஜனதாவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் ராகுல்காந்தியை சின்னப் பையன் என்று கேலியாக வர்ணிக்கும் விதமாக ‘பப்பு’ என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்தி பிரசார விளம்பரத்தை தயாரித்து அதை டெலிவிஷனில் ஒளிபரப்புவதற்கு தேர்தல் கமிஷனின் அனுமதியை பா.ஜனதா கோரி இருந்தது. அதேநேரம் பா.ஜனதா ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் இந்த வார்த்தைய பயன்படுத்தி ராகுல்காந்தியை கிண்டல் செய்தனர். இதில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த வார்த்தையை நீக்கும்படி தேர்தல் கமிஷன் மாநில பா.ஜனதாவுக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வார்த்தையுடன் விளம்பரம் வெளியிடுவதற்கு தடையும் விதித்தது.
இந்த நிலையில், பப்பு என்ற வார்த்தைக்கு பதிலாக யுவராஜ்(இளவரசர்) என்ற வார்த்தையை பயன்படுத்த பாரதீய ஜனதாவுக்கு தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ராகுல் காந்தியை யுவராஜ் என விமர்சித்து பிரச்சார விளம்பரம் குஜராத்தில் வெளியாகியுள்ளது. குஜராத் பாரதீய ஜனதா கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் இந்த பிரச்சார விளம்பரம் வெளியாகி இருக்கிறது.