Indians

கர்நாடக மாநிலத்தில் விவசாய நிலத்தில் 4 அடி ஆழத்தில் அதிசய நீருற்று

 பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தொப்ளா மாவட்டம் கங்காவதி தாலுகா கோடினாலா பகுதியை சேர்ந்தவர் கனகப்பா. இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் விவசாய தோட்டம் உள்ளது.

இந்த விவசாய தோட்டத்தில் உழுவதற்காக நேற்று அவரது மகன் சென்றார். அப்போது தோட்டத்தில் ஈரப்பதமாக இருந்தது. இதனால் ஈரப்பதமாக இருந்த இடத்தை மண்வெட்டியால் 4 அடி அளவுக்கு தோண்டி பார்த்தபோது, ஊற்று ஊறி நீர் பெருக்கெடுத்து மளமளவென வெளியேறியது. மேலும் அந்த நிலத்தில் வெவ்வேறு இடங்களில் தோண்டி பார்த்தார். அங்கேயேயும் இதேப்போல் தான் நீர் ஊற்று ஊறியது.

இது பற்றி தகவல் அறிந்ததும் கிராம மக்கள் சுமார் 4 ஆயிரம் பேர் திரண்டு அங்கு வந்தனர். கர்நாடக மாநிலத்தில் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தோட்டத்தில் நீர் ஊற்று ஏற்பட்டு இருப்பது கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது தெய்வீக சக்தி என்று நினைத்து வாழைப்பழம், பூ, ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து பூஜை செய்தார்கள்.

இது குறித்து விவசாயி கனகப்பாவிடம் கேட்டப்போது, அவர் கூறியதாவது:-

நேற்று காலையில் நான் வெளியூருக்கு சென்று விட்டேன். அப்போது நிலத்தை உழுவதற்கு போன எனது மகனிடம் இருந்து போன் வந்தது. அப்போது நான் உழுகின்ற இடத்தில் ஈரப்பதமாக இருக்கிறது என்று சொன்னான். உடனே நான் அந்த இடத்தை தோண்டி பார்க்குமாறு கூறினேன். இதையடுத்து ஈரப்பதமாக உள்ள இடத்தில் தோன்றி பார்த்தபோது நீர் ஊற்று ஊறியது. இந்த நீர் ஒருவித இனிப்பு சுவையுடன் உள்ளது.

ஏற்கனவே சுற்று வட்டார கிராமங்களில் 100 அடி முதல் 500 அடி வரை போர்வேல் போட்டால் கூட தண்ணீர் வருவதில்லை. போதிய மழை இல்லாததால் தற்போது கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் தற்போது இந்த பகுதி மட்டும் ஈரப்பதத்துடன் காட்சி அளிப்பது அதிசயமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நீர் ஊற்று சம்பவம் குறித்து வருவாய் அதிகாரிகளிடம் கேட்டபோது, நீர் ஊறியுள்ள அந்த விவசாய தோட்டத்திற்கு சென்று கள பரிசோதனை செய்ய உள்ளோம். கள பரிசோதனை செய்த பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

இது பற்றி மேல் அதிகாரிகள் அறிக்கை கேட்டு இருக்கிறார்கள். அதற்காக நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதனை செய்ய இருக்கிறோம். கடந்த 15 வருடங்களாக இந்த பகுதியில் குளங்கள் வறட்சியாகத்தான் இருக்கிறது. நீரின்றி காணப்படுகிறது. தற்போது இந்த மாதிரி நீர் ஊற்று காணப்படுவது அதிசயமாக உள்ளது. நிபுணர் குழுவினருடன் சென்று அங்கு ஆய்வு செய்யப்படும் என்றனர்.