சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இம்மாவட்டத்தின் புர்கபல் மற்றும் சிண்டாகுபா இடையே உள்ள பகுதிகளில் சி.ஆர்.பி.எப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) சார்பில் சாலை ஒன்று அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட இருந்தது. இந்நிகழ்வில் 74வது பட்டாலியனைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து கொண்ட மாவோயிஸ்டு இயக்கத்தினர் ரகசியமாக அவ்விடத்தை முற்றுகையிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். மாவோயிஸ்டுகளின் இத்தாக்குதலில் 11 வீரர்கள் பலியாகினர். மேலும், 7 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை அம்மாநில காவல்துறை உயரதிகாரிகள் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டனர். மேலும், இச்சம்பவத்தை தொடர்ந்து அம்மாநில முதல் மந்திரி ராமன் சிங் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதே மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 12 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.