மெல்போர்ன்: வெயில் அதிகமில்லாமல், வேகமாக சுழற்றியடித்த குளிர்ந்த காற்று, மெல்லிய மழைத் துாறலில், உலக கோப்பை தொடரின் காலிறுதியில் சாதிக்க, இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை துவக்கினர்.
உலக கோப்பை தொடரில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றது. இதில் பங்கேற்ற 6 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, காலிறுதியில் ‘ஏ’ பிரிவில் நான்காவது இடம் பிடித்த வங்கதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.
இதற்காக இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் இரவு தான் மெல்போர்ன் வந்தடைந்தனர். நேற்று காலை ஓய்வெடுத்த இந்திய வீரர்கள் மாலையில் பயிற்சி செய்யவில்லை. ஏனெனில், வேகமான காற்று, மழைத் துாறல் காரணமாக ஆடுகளம், பயிற்சி செய்யும் இடங்கள் மூடப்பட்டு இருந்தன.
இதனால், வீரர்கள் வட்டமாக சுற்றி நின்று ‘கேட்ச்’ பயிற்சியில் ஈடுபட்டனர். அணியின் உதவியாளர் ராகவேந்திரா என்பவர் வீரர்கள் சோர்வடையும் வரை, மணிக்கணக்கில் பந்தை எறிந்து கொண்டிருந்தார்.
பிறகு பந்தை பேட்டின் மத்திய பகுதியில் எப்படி சரியாக எதிர்கொள்வது என்றும், அப்போது அடித்த பந்துகள் உயரமாக சென்றதை பிடித்தும் பயிற்சி செய்தனர். பிறகு அரை மணி நேரம் கால்பந்து விளையாடினர்.
ஏன் தாமதம்
பெர்த்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லீக் போட்டி முடிந்ததும், இந்திய அணி ஹாமில்டன் சென்றது. இதற்கு சரியான படி டிக்கெட் பதிவு செய்யாததால், பெர்த்தில் இருந்து மெல்போர்ன் சென்று, அங்கிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்தை அடைந்து, பின் பஸ் மூலம் இந்திய வீரர்கள் ஹாமில்டனை அடைந்தனர்.
இதனால், வீரர்கள் மிகவும் களைப்படைந்து விட்டனர். இதையடுத்து, ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் போட்டி முடிந்த பின்பும், இந்திய வீரர்கள் ஆக்லாந்திலேயே கூடுதலாக ஒருநாள் தங்கினர். ஒருவழியாக கடந்த 16ம் தேதி இரவு தான் மெல்போர்ன் வந்தனர்.
தவான் ரகசியம் என்ன
சமீபகாலமாக பேட்டிங்கில் மிக மோசமாக சொதப்பினார் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான். திடீரென எழுச்சி பெற்ற இவர் தான், உலக கோப்பை தொடரில் அதிக ரன் (337) குவித்த இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய அணியின் உதவியாளர் ஒருவர் கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடர் துவங்கும் முன், தவானிடம் ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி நீண்ட நேரம் பேசினார். உணர்வுப்பூர்வமான இந்த பேச்சு தான் தவானின் வெற்றிக்கு காரணம்,’’ என்றார்.