ஈராக் அரசுப் படையினரின் வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த முக்கிய நகரமான மொசூல் நகரை கடந்த வாரத்தில் மீட்ட ஈராக் மற்றும் அமெரிக்கா வீரர்கள் இணைந்த படையினர், தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வட மேற்கு நகரங்களை தங்கள் வசம் வைத்துள்ள தீவிரவாதிகளை வான்வெளி தாக்குதல் மூலம் அழிக்கும் பணியை கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெடுத்து செல்கின்றனர்.
இந்நிலையில், சிரிய எல்லையில் உள்ள அல்-குயிம் பகுதியில் முகாமிட்டுள்ள ஐ,எஸ் தீவிரவாதிகளை குறிவைத்த ஈராக் விமானப் படையினர் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஐ,எஸ் அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் ராணுவ தலைவர் அயத் அல் ஜுமைலி-ம் பலியானார் என அரசுத் தரப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறுகிய பகுதிக்குள் ஐ.எஸ் அமைப்பினரை ஒடுக்கி விட்டதாகவும் விரைவில் அந்த அமைப்பின் தலைவர் அல்-பக்தாதியை வீழ்த்திவிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட அயத் அல் ஜுமைலி-ன் தலைக்கு அமெரிக்கா பல கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.