கொலம்பியா நாட்டில் ஆறுகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.
போகோட்டா:
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் உள்ள புட்டுமயோ மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஆற்றங்கரைகளின் ஓரம் பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 93 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
மேலும், பல பேர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போயுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. அங்கு நடந்துவரும் மீட்புப் பணிகளை பார்வையிட்ட அந்நாட்டு பிரதமர் ஜூவன் மானுவல் சாண்டோஸ், பேரிடர் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் இரண்டாவது நாளான இன்றும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை நிலவரப்படி 254 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் படையை சேர்ந்த உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட சுமார் 400 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயமான 200-க்கும் அதிகமானவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இம்மாகாணத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.