Cinema Entertainment Flash News Tamil

அனைத்தும் பறிகொடுத்த சிம்பு …. !!!

‘‘கடந்த இரண்டரை வருடங்களில் படம், பணம், காதலி மூன்றையும் இழந்து விட்டேன். என் வாழ்க்கையில் எல்லாமே போய் விட்டது’’ என்று நடிகர் சிம்பு உருக்கமாக பேசினார்.

படவிழா

நடிகர் சந்தானம் தயாரித்து நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

‘‘மன்மதன் படத்தில் நான்தான் சந்தானத்தை அறிமுகப்படுத்தினேன். அவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு போவதற்கு அவருடைய திறமைதான் காரணம். எனக்கு திறமையே கிடையாது. அதை உருவாக்கி கொடுத்தவர், எங்க அப்பா. இங்கு நான் நிற்பதற்கு காரணம், அவர்தான்.

ஆன்மிகம்

தட்டி விடுவதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக்கொடுப்பதற்கு இங்கு சில பேர்தான் இருக்கிறார்கள். என் படங்கள் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த இரண்டரை ஆண்டுகளில், நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்.

நிறைய பேர் நான் ஆன்மிகத்தில் போய் விட்டேன் என்று சொல்கிறார்கள். கடவுளைத் தேடித்தானே போனேன். ‘பிகரை’ தேடிப்போகவில்லையே. என்னை கஷ்டம் இல்லாமல் வளர்ந்தவர் என்று அனைவரும் சொல்வார்கள். சாதாரண மனிதனின் கஷ்டம் எப்படி இருக்கும்? என்பதை இந்த இரண்டரை வருடம் கற்றுக்கொடுத்தது.

படம், பணம், காதலி

கடந்த இரண்டரை வருடங்களில் என்னை விட்டு எல்லாமே போய் விட்டது. நான் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் அம்மாவிடம் கொண்டு போய்தான் கொடுப்பேன். இப்போது, செலவுக்கு அம்மாவிடம் போய் காசு கேட்க கஷ்டமாக இருக்கிறது.

என்னை விட்டு படம் போய் விட்டது. பணமும் போய் விட்டது. சரி, நமக்காக ஒரு பெண் இருக்கிறாள். கடைசிவரை அந்த காதலி நம்முடன் இருப்பாள் என்று நினைத்தேன். அவளும் போய் விட்டாள். கல்யாணமாகி குழந்தை பிறந்து அதன் சிரிப்பை பார்த்தாவது கஷ்டம் போய்விடும் என்று நினைத்தேன். அதுவும் இல்லாமல், கடவுள் என்னை சோதித்து விட்டார்.

ரசிகர்கள்

எல்லாமே என்னை விட்டு போய் விட்டாலும், உயிர் மட்டும் என்னிடம் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த உயிர் இருக்கிறது. இத்தனை கஷ்டங்களை நான் கடப்பதற்கு என் ரசிகர்கள் உடன் இருக்கிறார்கள். ஊடக நண்பர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

மே 9-ந் தேதி வெளியாக இருந்த ‘வாலு’ படம் வெளியாகவில்லை. என்னடா இது, கடவுள் நம்மை கைவிட்டு விட்டாரே என்று நினைத்தேன். இப்போது அந்த படத்தை என் அப்பா வாங்கி வெளியிட இருக்கிறார். நமக்காக வாழ்வதை விட, நாம் மற்றவர்களுக்காக வாழ்ந்தால் நன்றாக இருப்போம் என்பதை கடந்த இரண்டரை வருடங்களில் கற்றுக்கொண்டேன்.’’

இவ்வாறு சிம்பு உருக்கமாக பேசினார்.

விழாவில் நடிகர்கள் ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், சந்தானம், டைரக்டர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ராஜேஷ் எம், படத்தின் டைரக்டர் முருகானந்த், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோரும் பேசினார்கள்.