வேல்ராஜ் இயக்கத்தில், தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றது. படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய இந்தப் படத்தில் மிகப் பெரிய தவறு ஒன்றைச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் தனுஷின் அம்மா சரண்யா 'ஹார்ட் அட்டாக்'கால் இறந்து விட அவருடைய நுரையீரலை பணக்காரப் பெண்ணான சுரபிக்கு தானம் செய்வார்கள். அதனால் சுரபி மறுவாழ்வு பெறுவார். இதனால் சரண்யாவின் குடும்பத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் சுரபியின் அப்பா, அவருடைய கம்பெனியில் தனுஷை வேலைக்குச் சேர்த்துக் கொள்வார். அதன் பின் அந்த வேலையில் தனுஷ் எப்படி சாதிப்பார் என்பதுதான் கதையாகப் போகும்.
மருத்துவ ரீதியாக இயற்கை மரணம் அடைந்தோ, இதயத் துடிப்பு நின்று போன பிறகோ உடல் உறுப்புகளை யாருமே தானம் செய்ய முடியாது. மூளைச் சாவு அடைந்தால் மட்டுமே ஒருவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியும். அப்படியிருக்க 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் உடல் உறுப்பு தானம் பற்றிய ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
இம்மாதிரியான படங்களை எடுக்கும் போது சம்பந்தப்பட்டவர்களிடமோ, அல்லது மருத்துவர்களிடமோ ஆலோசனைப் பெற்று எடுத்தால் தானம் பற்றிய சரியான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.