Flash

ஏப்ரல் 14 அன்று சன் டிவியில் ‘அனேகன்’: கொந்தளிக்கும் ரசிகர்களுக்கு தனுஷ் வேண்டுகோள்

அனேகன் படம் வருகிற தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தை எப்படி டிவியில் ஒளிபரப்பலாம் என்று கொந்தளித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனுஷ் நடிப்பில், கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான அனேகன், பிப்ரவரி 13 அன்று ரிலீஸானது. டங்கா மாரி பாடலால் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் வரவேற்பில் படமும் ஹிட் ஆனது. சமீபத்தில் 50-வது நாளை வெற்றிகரமாகக் கொண்டாடியது. திரையரங்குகளில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் அனேகன், வருகிற தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

குறுகிய காலத்தில் படத்தை டிவியில் ஒளிபரப்புவதால் தனுஷ் ரசிகர்கள் கோபமடைந்துள்ளார்கள். படம் 100 நாள் ஓடவேண்டும். அதனால் படத்தின் ஒளிபரப்பை நிறுத்தவேண்டும் என்று ட்விட்டர் மூலமாக தனுஷிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். #StopAneganPremireSunTvஎன்றொரு ஹேஸ்டேகையும் பயன்படுத்தி ட்வீட் செய்து வருகிறார்கள்.

இதனையடுத்து, நடிகர் தனுஷ் தன் ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனேகன் படம் டிவியில் ஒளிபரப்பாவது குறித்து ரசிகர்கள் அமைதி காக்கவேண்டும். தயாரிப்பு நிறுவனத்துக்கும் சேனலுக்கும் உள்ள ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரியாது.  அதனால் கருத்து கூறமுடியாது.

படம் (அனேகன்) சூப்பர் ஹிட். அதுதான் முக்கியம். அதன்பிறகும் படம் டிவியில் ஒளிபரப்பப்பட்டால் அதிக அளவிலான மக்கள் கண்டுகளிக்கட்டும் என்று விட்டுவிடுவோம்.