Flash News World தலைப்பு செய்திகள்

இந்தோனேசியாவில் ஆறு ஐ.எஸ் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்

ஜகார்டா:
உலகில் முஸ்லிம்கள் அதிகம் வசித்து வரும் இந்தோனேசியாவில் சில காலமாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தல் காரணமாக பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் போலீசாரை தாக்க முயன்ற ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் துரத்தியதில் ஆறு பேரும் டர்பன் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடுமையான துப்பாக்கி சண்டைக்கு பின் ஆறு பேரையும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு முன்னரே தீவிரவாதிகளின் வாகனம் போலீசாரால் நோட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து வாகனத்தில் இருந்த மூன்று பேர் தாக்குதலுக்கு ஆயத்தமானதாகவும், அதன் பின் அவர்களின் வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர். இருந்தும், அந்த வாகனம் நிறுத்தாமல் சென்றதோடு அதில் இருந்தவர்கள் போலீசார் மீது சரமாரியாக சுட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியர்களில் சுமார் 400க்கும் அதிகமானோர் சிரியா சென்று ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் இவர்கள் மீண்டும் நாடு திரும்பும் போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

About the author

Julier