Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

போயஸ்கார்டனை கைப்பற்றவே ஓ.பி.எஸ் – தினகரன் அணி குறியாய் இருக்கிறார்கள்: குஷ்பு

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் இரா.மனோகர் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது.

தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் அருகில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க மத்திய போலீஸ் படையை தீவிரப்படுத்துகிறது தேர்தல் ஆணையம்.

அப்படியென்றால் கருப்பு பணத்தை பிரதமர் மோடி எப்படி ஒழித்ததாக கூற முடியும். உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றதா என்ற சந்தேகம் எழுகிறது.

தேர்தல் பிரசாரம் என்றால் எப்போதும் எதிர் கட்சிகள் மீதுதான் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் ஓ.பி.எஸ்.- டி.டி.வி.தினகரன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்கிறார்கள். இருவருமே துரோகிகள் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே 2 பேரும் பொது மக்களுக்குத் தான் துரோகம் செய்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் அவலநிலை உள்ளது. ஆனால் டாஸ்மாக்கை மூடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று மனு போடுகிறார்கள்.

எனக்கு வாய்ப்பு அளித்தால் நல்லது நடக்கும் என்று டி.டி.வி. தினகரன் கூறுகிறார். 57 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார். தமிழக பட்ஜெட்டில் கடன் சுமை அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் எப்படி வீடுகட்டி கொடுக்க முடியும்? அதற்கு எப்படி வருமானம் கிடைக்கும். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி. தினகரனும் போயஸ் கார்டனை கைப்பற்றவே குறியாய் இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் கேட்டு டெல்லி செல்லக்கூடிய அ.தி.மு.க.வினர் விவசாயிகள் பிரச்சினைகளை கொண்டு செல்லவில்லை. 20 நாட்களாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி இதுவரை சந்திக்கவில்லை.

இந்த தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தால் பல்வேறு நலத் திட்டங்களை செய்து கொடுக்கும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று விவசாயிகளை சந்திக்காமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மத்தியில் பல நல்ல திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தது. மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி காங்கிரசும், தி.மு.க.வும் தான். இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வரும். மக்கள் ஆட்சியாளர்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version