சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. பிரசாரம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை ஓய்கிறது. ஆர்.கே.நகரில் உச்சகட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அரசியல் கட்சிகள் மீது சரமாரியாக புகார்கள் வருகின்றன. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மீது ஓ.பி.எஸ். அணியினரும், ஓ.பி.எஸ். அணி மீது தினகரன் ஆதரவாளர்களும் புகார் கொடுத்துள்ளனர்.
பணப்பட்டுவாடா செய்ததாக டி.டி.வி.தினகரன் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், தி.மு.க. வினரும் சிக்கியுள்ளனர். பணப்பட்டுவாடா குறித்து ஒருவரை ஒருவர் மாறி மாறி புகார் கூறினாலும் வாக்காளர்களுக்கு பணம் தாராளமாக கிடைக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் பணம் கொடுத்ததாக கூறப்பட்டது. ஒரே நாள் இரவில் பணப்பட்டுவாடா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. 70 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தொகுதி முழுவதும் பணம் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கிறார்கள். சிறப்பு தேர்தல் அதிகாரி ஒருவரையும் சென்னைக்கு அனுப்பியுள்ளது. தொகுதியில் தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று வருமான வரித்துறையின் அதிரடி சோதனை தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, உறவினர்கள் வீடு, உதவியாளர் வீடு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
ஒரே நேரத்தில் 35 இடங்களில் நடந்த சோதனை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட 48 மணிநேரத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை சோதனை ஒருபுறம் நடந்தாலும் 2 அரசியல் கட்சிகள் நேற்று மீண்டும் பணப்பட்டுவாடா செய்துள்ளன.
ஒரு கட்சி ஓட்டுக்கு ரூ.2 ஆயிரமும் மற்றொரு கட்சி ஓட்டுக்கு ரூ.1000-ம் வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளதாக தகவல் பரவியது. தொகுதிக்குள் துணை ராணுவம், போலீஸ் படை, தேர்தல் பார்வையாளர்கள் முகாமிட்டு சுற்றி வந்தாலும் அவர்களின் கண்களை மறைத்து ஓட்டுக்கு மீண்டும் பணம் கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே ரூ.4 ஆயிரம் பெற்ற வாக்காளர்கள் இப்போது 2 கட்சிகள் கொடுத்த ரூ.3 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.7 ஆயிரம் வாங்கி உள்ளனர்.
பணம் யார் கொடுத்தாலும் வாங்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் கூலித் தொழிலாளர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களை குறி வைத்தே அரசியல் கட்சிகள் பணம் என்னும் பேராயுதத்தை பயன்படுத்துகின்றன.
வருமானவரித்துறை சோதனை, ஒருபுறம் நடந்தாலும் தொகுதியில் பணப்பட்டுவாடாவும் மறுபுறம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் உற்று நோக்கி வருகிறது.