அ.தி.மு.க அம்மா அணி சார்பில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் வரையில் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரம் சிக்கியதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். ‘வருமான வரித்துறை சோதனைக்கு முன்பாகவே, தேர்தல் ரத்து குறித்து மத்திய அரசில் உள்ளவர்கள் தீவிர ஆலோசனையில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாகவே ஐ.ஆர்.எஸ் அதிகாரி விக்ரம் பத்ரா அனுப்பப்பட்டார்’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, ஆளும்கட்சி நிர்வாகிகள் கள வேலைகளில் தீவிர ஆர்வம் காட்டினர். ஒரே காரணம், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியில் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதுதான். இரட்டை இலை முடக்கத்துக்குப் பிறகும், தொப்பி சின்னத்தை வீடு வீடாகக் கொண்டு சென்றனர். பண விநியோகத்திலும் விதம்விதமான யுக்திகளைக் கடைபிடித்தார் தினகரன். எந்த ஒரு நிர்வாகியிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் சிக்காத அளவுக்கு 20 ஆயிரம், 30 ஆயிரம் எனப் பணத்தைப் பிரித்து விநியோகிக்க வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனனும், வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரையில் விநியோகித்ததாக செய்திகள் வெளியானது. “தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கும் என்பதில் தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக இருந்தனர். ஒருவேளை ரத்து செய்யாவிட்டால் பார்த்துக் கொள்ளலாம் என தலைமைக் கழகத்தில் இருந்து அறிவுறுத்தியிருந்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த அன்றே, தஞ்சை, அரவக்குறிச்சியைப் போல் தேர்தலை ரத்து அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்துவிட்டது” என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.
” வாக்காளர்களுக்குப் பண விநியோகம் தொடர்பான தகவல்கள், இந்தளவுக்கு பகிரங்கமாக வெளியானதற்குக் காரணமே, தினகரனுக்கு தற்போது வலதுகரமாக இருக்கும் தென்மாவட்டப் புள்ளி ஒருவர்தான். பண விநியோகம் தொடர்பாக மூத்த அமைச்சர்களை அவர் தவறாகக் கையாண்டுவிட்டார். பணப்பட்டுவாடா தொடர்பான தகவல்களை வெகு சுதந்திரமாக வெளியில் உலவவிட்டுவிட்டார். ‘ சொந்த தொகுதிக்குள்ளேயே போட்டியிட்டுத் தோற்றுப் போனவருக்கு, ஆர்.கே.நகரில் விநியோகத்தைக் கவனிக்கும் பொறுப்பைக் கொடுத்தால் இப்படித்தான் இருக்கும்’ என தினகரனிடமே சீனியர்கள் சிலர் புகார் கூறியுள்ளனர். இதை காதில் வாங்காமல், மத்திய அரசின் முடிவால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் தினகரன். ‘ அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் நடக்கவிடாமல் சதி செய்துவிட்டனர். ‘நாம் வெற்றி பெறுவோம் என உறுதியாகத் தெரிந்தாலே, தேர்தலை ரத்து செய்யும் முடிவை அவர்கள் எடுப்பார்கள்’ என்பது நாம் அறிந்ததுதான். மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’ எனப் பேசியிருக்கிறார். ‘வருமானவரித்துறைக்கு நம்மைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு எது?’ என்ற கேள்விதான் ஆளும்கட்சியினர் மத்தியில் வலம் வருகிறது” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
இன்று காலை வருமான வரித்துறையின் சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ‘ஆர்.கே.நகரை மையப்படுத்தி மட்டுமே கேள்விகள் இருக்காது; அதையும் தாண்டி பல விஷயங்களைத் துருவ இருக்கிறது புலனாய்வுத்துறை’ என்கின்றனர் வருமானவரித்துறை வட்டாரத்தில்.