Science

புதிய பூமி பிராக்ஸிமா பி

பூமியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மாசுபடுத்திய பிறகு உலகின் மெகா தொழிலதிபர்களின் வேட்டையும் கனவும் எதை நோக்கியதாக இருக்கும்? இன்னொரு பூமியைத் தேடுவதுதானே!  அந்த தீவிர தேடுதலில் கிடைத்திருப்பதுதான் ‘பிராக்ஸிமா பி’ எனும் புதிய பூவுலகு.

பூமியிலிருந்து 4.25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிராக்ஸிமா சென்டாரி எனும் நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ள கோள்தான், ‘மனிதர்களால் வாழ முடிகிற இரண்டாவது உலகம்’ என ஆராய்ச்சியாளர்கள் சத்தியம் செய்யும் பிராக்ஸிமா பி ஆகும்.

2003ம் ஆண்டிலிருந்து பின்தொடர்ந்தாலும் பிராக்ஸிமா அவ்வளவு எளிதாக வானியலாளர்களுக்கு பிடி கொடுத்துவிடவில்லை. ‘‘நாங்கள் இதனைக் கண்டுபிடித்தது பெரும் பரவசத்தைத் தந்த தருணம் எனலாம்.

பேல் ரெட் டாட் (Pale red dot) எனும் இந்தத் திட்டம் தொடர்பான ஆராய்ச்சியில் ஏறத்தாழ 4 ஆண்டுகளை செலவழித்து பிராக்ஸிமாவின் சிக்னல்களைக் கண்டுபிடித்திருக்கிறோம்’’ என குதூகல மனநிலை குறையாமல் உரையாடுகிறார், லண்டனின் குயின் மேரி  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் கில்லம் அங்லாடா எஸ்க்யூட்.

பூமியைவிட 1.3 மடங்கு பெரியதாக உள்ள பிராக்ஸிமா பாறைக் கோளமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. தன் நட்சத்திரத்திலிருந்து 75 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

இதனை முழுமையாக சுற்றி முடிக்க 11.2 நாட்களை எடுத்துக்கொள்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவில் இது 5 சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். சூரியனிலிருந்து பல லட்சம் ஆண்டுகள் தள்ளியிருப்பதால் பிராக்ஸிமா குளுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கோளின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பதால், திரவநிலையில் நீர் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள்.

‘‘சூரியனிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதால் எக்ஸ்ரே மற்றும் புற ஊதாக்கதிர்கள் உள்ளிட்டவற்றின் தாக்கம் இருக்காது. செவ்வாய்க் கோளை விட சாதகமான சூழல் பிராக்ஸிமாவில் நிலவ வாய்ப்பு உள்ளது’’ என தம்ஸ் அப் காட்டி பேசுகிறார்  நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இக்னஸ் ஸ்நெல்லன்.

2003 முதல் 2009ம் ஆண்டு வரை சிலியில் உள்ள பாரனால் ஆய்வு மையத்திலிருந்து பிராக்ஸிமா கோளை பின்தொடர்ந்து தகவல்களைத் திரட்டி வந்தாலும், அதனை புதிய கண்டுபிடிப்பாக உறுதிப்படுத்த முடியாமல் தவித்த ஆய்வாளர்கள், 2013ம் ஆண்டுதான் உறுதியான முடிவுக்கு வந்தனர்.

லா சில்லா ஆய்வு மையத்தில் 60 நாட்கள் இரவு முழுக்க பிராக்ஸிமா கோளை கண் துஞ்சாது கண்காணித்து, அதனை புதிய கண்டுபிடிப்பு என பேல் ரெட் டாட் திட்டத்தைச் செயல்படுத்திய டுயோமி குழுவினர் உறுதி படுத்தினர். ‘‘பிராக்ஸிமா பி கண்டுபிடிப்பு,  கடந்த பத்தாண்டுகளில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும்’’ என்கிறார் ஸ்நெல்லன்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க், இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், ரஷ்ய தொழிலதிபர் யூரி மில்னர் ஆகியோர் இணைந்து 130 மில்லியன் டாலர்கள் செலவில் ஆல்பா நட்சத்திர மண்டலத்திற்கு விண்கலம் அனுப்பும் ஸ்டார் ஷாட் திட்டத்தை அண்மையில் அறிவித்துள்ளனர். இந்த விண்கலம் ஆல்பா நட்சத்திர மண்டலத்தை சென்றடைய 20 ஆண்டுகளுக்கு மேலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்ஷாட் திட்டத்தின் நோக்கம், மனிதர்கள் வாழும் சூழ்நிலை கொண்ட வேறு கோள்களைத் தேடிக் கண்டுபிடிப்பதாகும். அந்த வகையில் இன்னொரு பூமியான பிராக்ஸிமா பி கோளின் கண்டுபிடிப்பு முக்கியமானதாகிறது. இரண்டாம் உலகத்தின் கதவு திறந்தாச்சு!