Science

செல்ஃபி with சயின்ஸ்

அறிவியல் என்றால் பல பேருக்கு அலர்ஜி. காரணம், அதைப் பாடப் புத்தகமாக… மதிப்பெண் எடுக்க மனப்பாடம் செய்ததன் விளைவு. உண்மையில் அறிவியலைப் புரிந்து கொண்டு படித்தால் அல்வா போல இனிக்கும். ஏனெனில் நம் அன்றாட வாழ்வில் அறிவியல் இரண்டறக் கலந்து இருக்கிறது. சின்னச் சின்ன கேள்விகளோடு பயணித்து அதன் புதிரை புரியவைத்து, ‘இவ்வளவுதானா’ என அறிவியலை இனிமையாக்கும் முயற்சியே இந்தத் தொடர். ஜாலியா வாங்க… சயின்ஸ் கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்!

நம்முடைய உடலின் எடையைக் கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் ஏகப்பட்ட முயற்சிகள் செய்து வருகிறோம். இதற்கென இப்போது நிறைய உடற்பயிற்சிக் கருவிகள் வந்துவிட்டன. அதோடு விட்டார்களா? டாக்டரிடம் போனால், ‘டயட் கன்ட்ரோல்’ என்று சொல்லி நாம் விரும்பிச் சாப்பிடும் எல்லா உணவு களுக்கும் தடை போட்டு விடுகிறார்கள். ஆனால் டயட் கன்ட்ரோல் இல்லாமல், உடற்பயிற்சிக் கருவிகள் இல்லாமல், ஒரு பொருளின் எடையைக் கூட்டவும் முடியும்; குறைக்கவும் முடியும். விஷயம் ரொம்ப சிம்பிள்தான்… ஆனால் இது எங்கு நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? என்பதுதான் ஆச்சரியமானது.

நாம் பூமியின் தரைப் பரப்பிலிருந்து வானை நோக்கி உயரே செல்லச் செல்ல… பூமியின் புவியீர்ப்பு சக்தி குறைந்து கொண்டே செல்கிறது. உதாரணமாக, ஒரு கிலோ எடையுள்ள கத்திரிக்காயை கடையில் வாங்கிக் கொண்டு அதனை 6400 கி.மீ. உயரத்திற்கு நீங்கள் எடுத்துச்சென்று விட்டீர்கள் என்றால், அதன் எடை கால் கிலோவாக குறைந்துவிடும். நீங்கள் நாற்பது கிலோ தாஜ்மகால் மாதிரி அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் 6400 கி.மீ. உயரத்திற்கு பறந்துபோய் உட்கார்ந்து கொண்டு (அல்லது தொங்கிக் கொண்டு) உங்கள் எடையை நிறுத்துப் பார்த்தால் வெறும் 10 கிலோ அளவில்தான் இருப்பீர்கள்.

உடனே மேலே பறந்து போய்விட்டால் ‘ஸ்லிம்’ ஆகிவிடலாம்; பிறகு அழகாகத் திரும்பிவிடலாம் என்று கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டாம். உங்கள் தோற்றம் அப்படியேதான் இருக்கும். எடை மட்டுமே குறைந்து இருக்கும். ஏன் இப்படி எடை குறைகிறது என்பது ஒரு சுவாரசியமான கதை. இக்கட்டுரையின் தொடக்கத்தில் 6400 கி.மீட்டர் என்று குறிப்பிட்டோம். அது குத்துமதிப்பாகக் குறிப்பிடப்படவில்லை.

அந்த 6400 கி.மீ. என்பது பூமியின் மையப்புள்ளியில் இருந்து அதன் ஆரத்தைப்போல இரண்டு மடங்கு தூரம். பூமியின் ஆரம் 3200 கி.மீ. புவியீர்ப்பு விதியின்படி, பூமி தனது முழு நிறையும் மையத்தில் குவிந்திருப்பது போன்றே பொருள்களைக் கவர்ந்து இழுக்கிறது. இந்தக் கவர்ச்சி விசையானது தொலைவின் வர்க்கத்திற்கு எதிர்விகிதத்தில் குறைகிறது. அதாவது, பூமியின் ஆரத்தினைப் போல் இரண்டு மடங்கு தொலைவிற்கு கத்திரிக்காயை மேலே கொண்டு சென்றோம். எனவே அதன் வர்க்கத்தினைப் போல் (22 = 4) 4ல் ஒரு பங்காக எடை குறைந்துவிட்டது.

இதுபோல் ஒரு பொருளை பூமியின் ஆரத்தைப்ேபால மூன்று மடங்கு அளவுக்கு மூன்று மடங்கு உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டால் அதன் எடை 9 பங்காக (9ல் ஒரு பங்காக) குறைந்துவிடும். அதாவது 9 கிலோ எடையுள்ள ஒரு இரும்பு குண்டினை 9600 கிலோ மீட்டர் உயரத்திற்குக் கொண்டுபோய் வைத்துவிட்டால் அதன் எடை (32 = 9) ஒன்பதில் ஒரு பங்காக குறைந்து 1 கிலோவாக மாறிவிடும். இப்போது உங்களுக்கு ஒரு யோசனை கிடைத்திருக்கலாம். பூமியின் பரப்பிலிருந்து மேலே செல்லச் செல்ல எடை குறைகிறது என்றால், பூமியில் சுரங்கம் அமைத்து கீழே சென்றால் எடை கூடிவிடும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். அப்போதும் எடை கூடாது; குறையவே செய்யும்.

ஏனென்றால் பூமியின் அடியில் உள்ள ஒரு பொருளின் மீது மேல் நோக்கிய விசை, கீழ் நோக்கிய விசை என்று இரண்டும் செயல்படுகின்றன. அவ்வாறு செயல்படும்போது பொருளின் எடையில் அது மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த மாற்றம் எடை இழப்பாகவே அமைகிறது. பூமியின் மையத்திலிருந்து பொருள் இருக்கும் தொலைவிற்கு சமமான ஆரமுடைய கோளத்தின் இழுப்பு விசைதான் இந்த எடை இழப்பிற்கு காரணம். இதனால் என்ன நிகழும் தெரியுமா..? பூமியின் சரியான மையத்திற்கு ஒரு பொருள் சென்றுவிட்டால் அங்கு அதற்கு எடையே இருக்காது. ஆம், அந்தப் பொருளின் எடை பூமியின் மையத்தில் பூஜ்யமாகிவிடும். அதனால்தான் சொல்கிறேன். பூமியின் மேற்பரப்பில்தான் எடை கூடுவது, குறைவது என்ற பிரச்னையெல்லாம்;பூமியைவிட்டு சற்று விலகிவிட்டால் எடைப் பிரச்னையே இருக்காது.