Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

இந்தியாவை வீழ்த்த ஐ.பி.எல். அனுபவம் கைகொடுக்கும் வங்காளதேச வீரர் அல்-ஹசன் சொல்கிறார்

மெல்போர்ன்,

உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது கால்இறுதியில் ஆசிய அணிகளான இந்தியாவும், வங்காளதேசமும் மெல்போர்னில் நாளை சந்திக்கின்றன. இதையொட்டி நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இரு அணி வீரர்களும் ஜாலியாக கால்பந்தும் விளையாடி மகிழ்ந்தனர்.

பின்னர் உலகின் முன்னணி ஆல்-ரவுண்டரான வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நாங்கள் உலக கோப்பை கால்இறுதி ஆட்டத்தில் விளையாட இருப்பது இது தான் முதல் முறையாகும். அதனால் வங்காளதேச கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய ஆட்டம் என்று நீங்கள் சொல்லலாம். அதே நேரத்தில் இது கிரிக்கெட்டில் இன்னொரு சாதாரணமான ஆட்டம் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மெல்போர்னில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நெருக்கடியை சமாளிப்பது எப்படி என்பது, எனக்கு கொஞ்சம் தெரியும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய போது அது போன்ற சூழலை சந்தித்து உள்ளேன். கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானம் கூட ஏறக்குறைய 70 ஆயிரம் ரசிகர்கள் இருக்கை வசதிகளை கொண்டது தான். ஆனாலும் மெல்போர்னில் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை களம் இறங்கும் வரை உணர முடியாது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிடைத்த அனுபவம் மூலம் டோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களுக்கு எதிராக திட்டங்களை வகுப்பதில் என்னால் உதவிட முடியும். அவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் பற்றிய தகவல்களை எனது சக வீரர்களுக்கு தெரிவிப்பேன். இந்தியா நடப்பு உலக சாம்பியன். அந்த அணியின் டாப்-6 வரிசை பேட்ஸ்மேன்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை படைத்தவர்கள். வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் இவர்களை சீக்கிரம் வீழ்த்த வேண்டியது முக்கியம்.

ஒரு பேப்பர், பேனாவை எடுத்துக் கொண்டு வங்காளதேசத்தை விட இந்தியா சிறந்த அணி என்று எளிதில் எழுத முடியும். அதில் சந்தேகமும் இல்லை. ஆனால் ஆட்டத்திற்குரிய குறிப்பிட்ட நாள் எங்களுக்கு நல்லதாக அமைந்து, அவர்களுக்கு மோசமானதாக அமைந்தால் அதன் பிறகு எதுவும் நடக்கலாம்.

2007-ம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த போது, நாங்கள் அச்சமின்றி விளையாடினோம். அதே போன்று இப்போதும் விளையாட விரும்புகிறோம். இந்த உலக கோப்பையை பொறுத்தவரை இதுவரை நாங்கள் நன்றாக ஆடியுள்ளோம். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியது போன்று செயல்பட்டால், எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு ஷகிப் அல்-ஹசன் கூறினார்.

Exit mobile version