ஐ.பி.எல். தொடக்க விழாவில் முன்னாள் பிரபல வீரர்கள் தெண்டுல்கர், கங்குலி, ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
அப்போது ஐ.பி.எல். போட்டி குறித்து தெண்டுல்கர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்று புகழை அடையும் என்று நான் நினைக்கவில்லை. 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை. இது மிகப் பெரிய சாதனையாகும். ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் இதற்கான வாய்ப்பே இல்லை.
2007-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி குறித்து அறிவிப்பு வெளியானது. 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். அறிமுக போட்டியில் ஆடினேன். இந்த போட்டி மிகப்பெரியதாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஐ.பி.எல். போட்டி இந்தியாவுக்கு பெருமை அளிக்கும் வகையில் இருக்கிறது. எல்லா வீரர்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு தொடரும் கடுமையான போட்டியில் முடிகிறது.
இந்த போட்டியை ரசிகர்கள் வெகுவாக விரும்புகிறார்கள். ஸ்பான்சர்களும் பல்வேறு மட்டத்தில் ஆதரவை தெரிவிக்கிறார்கள். இதில் விளையாடும் 8 அணிகளுமே சமபலத்துடன் தான் இருக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்துவதை பொறுத்து வெற்றி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கங்குலி கூறும்போது, உலக கோப்பை போட்டிக்கு கிடைக்கும் வரவேற்பை போல ஐ.பி.எல். ஆட்டத்துக்கும் கிடைக்கிறது. 20-வது ஐ.பி.எல். போட்டி வரும். அதன் தொடக்க விழாவுக்கும் நாங்கள் வருவோம்” என்றார்.
முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் கூறும்போது, “ஐ.பி.எல். போட்டியை நான் மிகவும் நேசிக்கிறேன். என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ஒரே மாதிரியாகவே ஆடுவேன். மனநிலையை மாற்றிக்கொள்ள மாட்டேன்.
எந்த போட்டியாக இருந்தாலும் அடித்து ஆடவே முயற்சிப்பேன். ரசிகர்களை மகிழ்ச்சிக்கு ஆடுவதுதான் முக்கியம். ஐ.பி.எல். வெற்றிக்கு ரசிகர்கள்தான் காரணம்” என்றார்.
வி.வி.எஸ்.லட்சுமண் கூறும்போது, கிரிக்கெட்டின் புரட்சி 20 ஓவர் ஆட்டம். புதிதாக ரசிகர்கள் வருகிறார்கள். அதைபற்றி பேசுவார்கள் என்றார்.