Sports

ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி: யுவராஜ்சிங்குக்கு வார்னர் பாராட்டு

 ஐதராபாத்:

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐதராபாத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 35 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்தது.

யுவராஜ்சிங் அதிரடியாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். அவர் 27 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். ஹென்ரிக் 37 பந்தில் 52 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), தவான் 31 பந்தில் 40 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர்.

பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 172 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் ஐதராபாத் 35 ரன்னில் வெற்றி பெற்றது.

கிறிஸ் கெய்ல் அதிகபட்சமாக 21 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), கேதர் ஜாதவ் 16 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஆசிஷ் நெக்ரா புவனேஷ்வர்குமார், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஷித்கான் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷிக்கான் தனது முதல் ஐ.பி.எல். ஆட்டத்திலேயே மிகவும் அற்புதமாக பந்து வீசினார். அவர் ஒரு திறமையான சுழற்பந்து வீரர். அவரது அறிமுகம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

மிடில் வரிசையில் எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. யுவராஜ் சிங்கின் அதிரடியால் ரன்களை குவித்தோம். அனுபவம் வாய்ந்த அவரது அதிரடியான ஆட்டத்தை நாங்கள் ஏற்கனவே அறிந்து இருந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து பெங்களூர் அணியின் தற்காலிக கேப்டன் வாட்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களை விட ஐதராபாத் அணி மிகவும் சிறப்பாக ஆடியது. இதில் இருந்து பாடம் கற்று அடுத்தப்போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

ஐதராபாத் அணி 2-வது ஆட்டத்தில் குஜராத் லயன்சை 9-ந்தேதி சொந்த மண்ணில் சந்திக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 8-ந்தேதி எதிர்கொள்கிறது.