Sports Tamil

43 வயதிலும் களைகட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பிரவீன் தாம்பே!!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 43 வயதிலும் களத்தில் ஜொலிப்பது எப்படி என்பது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பிரவீன் தாம்பே விளக்கமாக கூறியுள்ளார்.

ராஜஸ்தான் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை வீழ்த்தி தொடர்ந்து 4–வது வெற்றியை பதிவு செய்தது. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியால் 5 விக்கெட்டுக்கு 127 ரன்களே எடுக்க முடிந்தது. சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

எளிய இலக்கு என்றாலும் ராஜஸ்தான் அணியும் கடைசி பந்து வரை போராட வேண்டி இருந்தது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்து பவுல்க்னெர் இலக்கை எட்ட வைத்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டுவது இது 4–வது நிகழ்வாகும்.

பிரவீன் தாம்பே
சுழற்பந்து வீச்சில் கலக்கி வரும் ராஜஸ்தான் பவுலர் பிரவீன் தாம்பேவுக்கு வயது 43. ஐ.பி.எல். போட்டியில் வயதான வீரர் இவர் தான். வெற்றிக்கு பிறகு பிரவீன் தாம்பே கூறுகையில், ‘எனக்கு வயது 43 என்பது தெரியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு சரியான உடல்தகுதியுடன் இருப்பது அவசியம். சிறப்பான உடல்தகுதியுடன் இருப்பதற்காக பல்வேறு வழிகளில் மிக கடினமாக உழைக்கிறேன். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். குறிப்பாக புரோட்டீன் சத்து வகை உணவுகளை உட்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். இது மிக வேகமாக நடக்கக்கூடிய போட்டி என்பதால் பயிற்சி முறைகளில் அதையும் மனதில் வைத்து செயல்படுகிறேன். என்னை பொறுத்தவரை வயது என்பது வெறும் எண் தான். திறமைக்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை.

எங்களது வீரர்களின் ஓய்வறையில் சவுகரியமான சூழல் நிலவுகிறது. சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு மத்தியில் நான் ஒரு போதும் தனிமைபடுத்தப்பட்டதாக உணர்ந்ததில்லை. முதல்தர போட்டி வீரர்களையும், சர்வதேச வீரர்களையும் இணைக்கும் பாலமாக ஐ.பி.எல். விளையாட்டு இருக்கிறது. இங்கு நான் உற்சாகமாக விளையாடி வருகிறேன். எனக்கு என்று எந்த இலக்கும் கிடையாது. கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும், எதிர்காலத்திலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது ஆசை’ என்றார்.

முதல்தர போட்டி குறித்து…
பிரவீன் தாம்பே 2013–ம் ஆண்டில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். ஆனால் அதற்கு முன்பு அவர் முதல்தர போட்டிகளில் கூட விளையாடியதில்லை. 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். மும்பை அணிக்காக இரண்டு ரஞ்சி போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். தவிர சில உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘குறைவான முதல்தர போட்டிகளில் விளையாடுவது குறித்து வருத்தமில்லை. முதல்தர போட்டிகளில் கூட ஆடாத நிலையில் எனது திறமையையும், கிரிக்கெட்டின் மீது நான் கொண்டுள்ள ஈர்ப்பையும் பார்த்து தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எனக்கு வாய்ப்பு அளித்தது.

இதுவரை நான் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளை பார்த்தால், நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்து விளையாடி இருக்கிறேன். முடிவுகள் என்பது தானாக வந்து சேரும். எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியதில் இருந்து ஒரே மாதிரியான வேட்கையுடன் விளையாடி வருகிறேன். அது தொடரும்’ என்றார். இந்த ஐ.பி.எல். சீசனில் அவர் இதுவரை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.