Story Tamil

இனிமேல் எனக்கு இந்த போன் வேண்டாம்டா இனிமேல் எனக்கு இந்த போன் வேண்டாம்டா-அம்மாவின் சோகம்

என்னங்க, உங்க அம்மாவோட எழுபதாவது பிறந்தநாளைக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுக்கலாம்க” என்றாள் வசந்தின் மனைவி அகிலா. வசந்த் ஒரு நிறுவனத்தின் மேலாளர்.

வீட்டுக்கு மூத்தவன். தந்தையின் மறைவுக்கு பின் அவன் இரு இளைய சகோதரிகளுக்கும் உள்ளூரிலே திருமணம் முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டான்.

சகோதரிகளும் அவர்கள் வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள்தான் இருந்தனர். வசந்தும், அகிலாவும் வேலைக்குச் சென்றபின் அம்மா மட்டும் தனியே வீட்டில் டிவி பார்த்துகொண்டோ, கோவிலுக்கு சென்றோ பொழுதை போக்குவாள். அவ்வப்போது மகள்களும், பேரக் குழந்தைகளும் அவளை பார்க்க வந்து போவார்கள்.

வசந்துக்கும் அகிலா சொல்வது சரியெனப் பட்டது. அம்மாவுக்கு ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்தால் அவளது தனிமை குறையும். மகள்கள், பேரனுடன் பேசிக் கொள்வாள்.

அம்மாவின் பிறந்த நாள் அன்று, “அம்மா, இதோ உனக்கு ஏத்தமாதிரி ஒரு போன்” என்று பரிசுப் பொட்டலத்தை நீட்டினான்.

அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி. அவளுக்கு போனை எப்படி இயக்குவது என்று ஒருவாரம் எல்லோருமாக சேர்ந்து சொல்லித் தந்தனர்.

அவளும் மகள்களுடன் உற்சாகமாக பேசிவந்தாள். அதைப் பார்த்து வசந்த் சந்தோஷப்பட்டான். மகள்களும், “அம்மா, வத்தல் குழம்புக்கு என்ன மசாலா போடுவீங்க?” என்று எல்லாவற்றிக்கும் போனில் கூப்பிடு வார்கள்.

ஒரு மாதம் கழிந்தது. அம்மா வாட்டமாக இருப்பதாக உணர்ந்தான் வசந்த். கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டாள்.

ஒரு காலை அம்மாவே வசந்திடம், “இனிமேல் எனக்கு இந்த போன் வேண்டாம்டா ” என்று கூறினாள்.

புரியாமல் விழித்த வசந்த்திடம், “நான் எல்லார்கிட்டயும் பேசணும்னுதான் போன் வாங்கி கொடுத்தே. ஆனா, போன் வந்தப்புறம், யாருமே என்னைப் பாக்க வீட்டுக்கு வரமாட்டேங்கிறாங்கடா. எல்லாத்தையும் போன்லயே பேசிடறாங்க. என் பேரன் கூட முன்ன வாரத்துக்கு ஒரு தடவை வருவான்.

இப்ப வர்றதில்லை. கேட்டா, அதான் போன்ல பேசறேனே பாட்டின்னு சொல்றான். இந்த போனால, என் சொந்தமெல்லாம் இன்னும் தூரமா போயிடுமோனு இருக்கு. இத நீயே வச்சுக்கோ. அவங்க எப்பவும் போல என்னை நேரா வந்து பாக்கட்டும்” என்றாள்.

அம்மா சொல்வது வசந்துக்கும் சரியெனப்பட்டது!