Sports

இந்தூரில் இன்று மோதல்: மும்பை ஆதிக்கத்தை பஞ்சாப் சமாளிக்குமா?

ஐ.பி.எல். போட்டியின் 22-வது ‘லீக்’ ஆட்டம் இந்தூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி முதல் இரண்டு ஆட்டங்களில் (புனே, பெங்களூர்) வென்றது. அதை தொடர்ந்து 3 போட்டிகளில் (கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத்) தோற்றது.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 3-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் பஞ்சாப் உள்ளது. அந்த அணியில் கேப்டன் மேக்ஸ்வெல், மனன் வோரா, மில்லர், ஹசிம் அம்லா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

மும்பை அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் புனேயிடம் 7 விக்கெட்டில் தோற்றது.

அதை தொடர்ந்து கொல்கத்தா (4 விக்கெட்), மும்பை (4 விக்கெட்), பெங்களூர் (4 விக்கெட்) குஜராத் (6 விக்கெட்) அணிகளை வென்று இருந்தது. பஞ்சாப்பை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா, நித்திஷ் ரானா, ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட், மலிங்கா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அதிரடியை சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலானதே. அதே நேரத்தில் சொந்த மண்ணான இந்தூரில் 2 வெற்றி பெற்று இருந்ததால் பஞ்சாப் நம்பிக்கையுடன் உள்ளது.

இரு அணிகள் மோதிய போட்டியில் மும்பை 9 ஆட்டத்திலும், பஞ்சாப் 9 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.