Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

டேவிஸ் கோப்பையில் பயஸ் இல்லை: ரோகன் போபண்ணாவை தேர்வு செய்தார் கேப்டன் பூபதி

 புதுடெல்லி:

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய- ஓசியானா மண்டலம் குரூப்-1 இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் பெங்களூருவில் நாளை தொடங்கி (ஏப்ரல் 7) 9-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன் மற்றும் இளம் வீரர்கள் ஸ்ரீராம் பாலாஜி, பிராஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இவர்களில் பயஸ், போபண்ணா மாற்று வீரர்களாக வைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் இறுதி அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது யுகி பாம்ப்ரி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய நிலையில், மாற்று வீரர்களில் ஒருவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது உறுதியானது. ஆனால், அவர்களில் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், டேவிஸ் கோப்பை அணிக்கு போபண்ணாவை தேர்வு செய்துள்ளார் கேப்டன் மகேஷ் பூபதி. லியாண்டர் பயஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். கேப்டன் மகேஷ் பூபதி போட்டியில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உஸ்பெகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் டெனிஸ் இஸ்டாமின் காயம் காரணமாக விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

Exit mobile version