வசந்தபாலன் தனது காவியத்தலைவன் படத்தை கே.பி.சுந்தராம்பாள் – கிட்டப்பா காதலை மையப்படுத்தி எடுத்திருப்பதாக தகவல். இது அவர்களுடைய காதல் கதையில்லை. ஆனால், கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கையை ஒட்டி படத்தை எடுத்திருப்பதாக வசந்தபாலன் விளக்கமளித்தார்.
இந்த தலைமுறைக்கு சுந்தராம்பாள் என்ற பெயர் அறிமுகமில்லை. திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற பழம் நீயப்பா பாடலையோ, மகாகவி காளிதாஸில் இடம்பெற்ற சென்று வா மகனே சென்று வா பாடலையோ தமிழனின் செவிகள் கேட்க நேர்கையில் அந்த குரலின் வசீகரமும், கம்பீரமும் அவனது கால்களை பிடித்து நிறுத்தும். சுந்தராம்பாள் எங்கும் சென்றுவிடவில்லை. அமுதூறும் பாடலாக அவர் இங்கேயேதான் இருக்கிறார்.
கொடுமுடி பாலாம்பாள் சுந்தரம்பாளின் சுருக்கம்தான் கே.பி.சுந்தரம்பாள். பிறந்தது ஈரோட்டில் உள்ள கொடுமுடி. அவரது பால்யகாலம் குறித்து உறுதியான செய்திகள் இல்லை. இளம்வயதில் ரயிலில் பாடி பிச்சையெடுத்த நேரத்தில் அவரது குரல்வளத்தை கண்ட நடேசா ஐயர் என்ற நாடக நடிகர் அவரை நாடகத்துறையில் சேர்த்துவிட்டதாக ஒரு செய்தி உள்ளது. அவர் கொடுமுடியில் உள்ள லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி கற்றதாக இன்னொரு செய்தியும் உள்ளது.